அதிகாரிகள் அலட்சியம்: பேச்சிப்பாறையில் மூவர் பலி!

Published On:

| By Balaji

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை ஜீரோபாயின்ட் பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரணமடைந்த இளைஞர்கள் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகேயுள்ள குற்றியாறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கோதையாறு, முடவன்பொற்றை, தச்சமலை, குற்றியார், மாறமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. அவற்றில் குற்றியாறு பகுதியில் நேற்று(அக்டோபர் 28) மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் ஜீரோபாயின்ட் பகுதிக்குச் சென்று மின் இணைப்பைச் சரி செய்ய முயன்றுள்ளனர்.

மின்மாற்றியில் காய்ந்த மரக்கம்பால் தட்டி மின் இணைப்பை சரி செய்ய அவர்கள் முயன்ற போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் குற்றியார் பகுதியைச் சேர்ந்த சஜின் சுபாஷ் (20), சஜின் சலோ (22), மன்மதன் (25) ஆகிய மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்த வழியாகச் சென்ற சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் பேச்சிப்பாறை போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி உடல் கூறாய்வு செய்வதற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்களுள் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘எங்கள் கிராமம் மலைப் பிரதேசமாக இருப்பதால் அடிக்கடி மரக்கிளைகள் விழுவது போன்ற காரணங்களால் மின்சாரம் தடைபடுவது வழக்கம். அதே போன்று நேற்று மதிய நேரத்தில் இருந்து எங்கள் பகுதியில் மின்சாரம் தடைபட்டிருந்தது. இது தொடர்பாக மின்சார வாரியத்திற்கும் தகவல் அளித்திருந்தோம். ஆனால் அவர்கள் நீங்களே அதைச் சரி செய்து விடுங்கள் என்று கூறினார்கள். மலைப்பகுதியில் அமைந்துள்ள எங்கள் கிராமத்திற்கு 25 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துவந்து மின் இணைப்பை சரி செய்வது கடினமானது என்பதால் எந்த பகுதியில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று மின்சார வாரிய ஊழியர்கள் தகவல் தருவார்கள். அடர்ந்த காட்டுப்பகுதியான எங்கள் கிராமத்தில் இரவு நேரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி சிறு பழுதுகள் ஏற்பட்டால் அதை எங்கள் கிராம இளைஞர்களே சரி செய்வது வழக்கம். இது தொடர்பாக பலமுறை மின்சார வாரியத்திடம் தகவல் அளித்திருந்தோம். இந்த இழப்பு எங்களால் தாங்க முடியாதது’ என்று வேதனையுடன் கூறினார்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share