வன்னியர் சமூகத்திற்கு திமுக செய்துள்ள நன்மைகளை பட்டியலிட்டு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், திமுக சார்பாக புகழேந்தியும் போட்டியிடுகிறார்கள். தொகுதியில் மொத்தமுள்ள 2,23,178 வாக்காளர்களில் 95,275 பேர் வன்னியர்கள்.
வன்னியர்கள் வாக்கு வங்கியுள்ள பாமக, அதிமுக கூட்டணியில் இருக்கிறது. இதனால், வன்னியர்களின் வாக்குகளைக் கவருவதற்கான பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக நாம் [விசிகவைக் குறிவைக்கும் அதிமுக, பாமகவை குறிவைக்கும் திமுக!](https://minnambalam.com/k/2019/10/06/98) என்ற தலைப்பில் நேற்று 1 மணிப் பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் வன்னியர் சமுதாயத்துக்கு திமுக செய்துள்ள நன்மைகள், திட்டங்கள் குறித்தும், இனி செய்யவுள்ள விஷயங்கள் தொடர்பாகவும் இன்று (அக்டோபர் 7) அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அந்த அறிக்கையில், “இடஒதுக்கீடு கேட்டு வன்னியர்கள் நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு, கைது நடவடிக்கைகள் மூலம்- துப்பாக்கி முனையில் அதனை அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அதிமுக ஆட்சியாளர்கள் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்” என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “28.3.1989 அன்று வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை வெளியிட்டதோடு மட்டுமின்றி, வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கலைஞர்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, “முதன் முதலில் ராஜ்மோகன் என்ற வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியை, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்தார் கலைஞர். வன்னியர் சமுதாயத் தலைவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைத்தவர் கலைஞர். வன்னியர் சொத்துக்களைப் பாதுகாக்க திமுக ஆட்சியில்தான், வன்னியர் நல வாரியம் அமைக்கப்பட்டது” என்றெல்லாம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இந்த எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில், அப்படி, வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காகச் செய்த சாதனை என, ஒரு சாதனையையாவது விரல் விட்டுச் சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததும் வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.ஜி என்கிற ஏ.கோவிந்தசாமிக்கும் மணி மண்டபமும் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், “மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி,உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று உறுதியளித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் குறித்து அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தொகுதியிலுள்ள வன்னியர்களின் வாக்குகளை கவரவே இவ்வாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.�,