சேவை வழங்குவதில் தாமதம் : தவிக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்!

Published On:

| By Balaji

இந்தியாவிலேயே பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், தற்போது நஷ்டத்தில் தத்தளித்து வருவதால் வாடிக்கையாளர்களுக்குச் சரியான சேவைகள் இல்லாமல் தவித்து வருவதாக அதிகாரிகள் வட்டத்தில் சொல்கிறார்கள் .

இந்தியாவில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 632 கிராமங்களில் தரைவழி போன், வில்போன், கைப்பேசி என அனைத்து சேவையையும் வழங்கி வந்தது பிஎஸ்என்எல் நிறுவனம்.

2014இல் பிஎஸ்என்எல் அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி, 2016 இல் அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் வசதியுடன் தொலைப்பேசி சேவையையும் கொண்டு சேர்ப்போம் என்றார். ஆனால் தற்போது சரியான சேவைகள் வழங்கப்படாததால் தனியார் நிறுவனத்தை நோக்கிச் செல்கிறார்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்.

இந்நிலையில், பிஎஸ்என்எல் சேவை எப்படியிருக்கிறது, இணைய வசதி சேவைகள் எப்படியிருக்கிறது என்று அறிந்துகொள்ள கடலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை நாம் அணுகினோம். பிஎஸ்என்எல் இணையச் சேவையைப் பெறும் வகையில், ஏற்கனவே இருந்த தரைவழி சேவையைத் தொடர கடந்த மாதம் 28ஆம் தேதி, கடலூர் அலுவலகத்தில் 1125 ரூ கட்டணம் செலுத்தினோம், நெட் வசதி பெறுவதற்கு ஜூன் 1ஆம் தேதி 899 ரூபாய் கட்டணம் செலுத்தினோம், ஆனால் 16 நாட்கள் கடந்தும் இதுவரையில் எந்த இணைப்பும் கொடுக்கவில்லை.

கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மதுரை டிஜிஎம் வரையில் புகார் தெரிவித்தும் பலனில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு மதுரை டிஜிஎம்-ஐ நேரடியாகச் சந்தித்து பிரச்சனைகளைச் சொன்னோம், நீங்கள் போங்க உடனே இணைப்பைக் கொடுக்கச்சொல்கிறேன் என்றார். ஆனால் சேவை வழங்கவில்லை.

எனவே, மீண்டும் கடலூர் பிரண்ஸ் நகர் பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ் அலுவலகத்தில் தொடர்புகொண்டு கேட்டோம். அவர், ‘நீங்கள் எந்த அதிகாரியிடம் சொன்னாலும் இணைப்பு கொடுக்க வாய்ப்புகள் இல்லை, சட்டியிலிருந்தால் தானே ஆப்பையில் வரும், அனைத்து சேவைகளும் தனியாருக்குக் கொடுத்துவிட்டார்கள், எங்களுக்கு வேலையில்லை. ஒப்பந்தகாரார் சென்னையிலிருக்கிறார். அவர் எப்போது வருவாரோ அப்போதுதான் இணைப்பு கொடுக்க முடியும், எங்கள் மீது கோபப்படுவதில் அர்த்தம் இல்லை, தனியாருக்குத் தாரைவார்த்த மத்திய அரசு மீது கோபப்படுங்கள்’ என்கிறார்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சம்பந்தத்தை, தொடர்புகொண்டு பிஎஸ்என்எல் சேவைகள் முடங்கிப் போவதற்கு என்ன காரணம் என்று கேட்டோம். அதற்கு அவர், தரைவழி போன் சேவையில் பிஎஸ்என்எல் பொது நிறுவனத்தை முந்துவதற்கு எந்த நிறுவனமும் இல்லை, இந்தியா முழுவதும் 1.75 கோடி இணைப்புகள் உள்ளது. சிறப்பான சேவைகள் செய்து வந்தோம், அதேபோல் கைப்பேசி சேவையும் சிறப்பாகச் செய்து வந்தோம், தற்போது அனைத்து சேவையும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விட்டதால் சரியான சேவை இல்லாமல் வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனத்துக்கு மாறுவதற்கு வழிவகுக்கிறது” என்று கூறினார்.

சர்வீஸ்களை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விடுவதால் அரசுக்கு லாபமா நஷ்டமா என்று மாவட்டச் செயலாளர் சம்பந்தத்திடம் கேட்டதற்கு, “கடலூர் மாவட்டத்தில் 35 ஆயிரம் தரைவழி இணைப்புகள் உள்ளது. இதற்கு முன்பு, லைன் மேன் முதல் மாவட்ட அதிகாரிகள் வரை 800 பேர் பணியில் இருந்தார்கள், தற்போது 250 பேர் தான் இருக்கிறோம். 35 ஆயிரம் இணைப்புக்கும் சேவை செய்வதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் ஆண்டுக்கு 1.1 கோடிதான் செலவானது, இப்போது தனியாரிடம் டெண்டர்விட்டதால் ஆண்டுக்கு 3.69 கோடி செலவாகிறது. அதாவது ஒரு இணைப்புக்கு 1054 ரூபாய் வழங்கப்படுகிறது. அப்படியானால், சேவை செய்வதற்கு, இந்தியா முழுவதும் ஒன்றே முக்கால் கோடி இணைப்புக்கு எத்தனை கோடி ரூபாய் தனியாருக்கு அள்ளிக் கொடுக்கிறது பாருங்கள் என்றார்.

பிப்ரவரி 28ஆம் தேதி, இந்தியா முழுவதும் 85ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் விஆர்எஸ் கொடுத்துவிட்டதால் எந்த வேலை செய்வதற்கும் ஆட்களும் இல்லை சேவையும் இல்லை.

பொது நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதால் தனியார் முதலாளிகளுக்குத்தான் லாபமே தவிர, அரசுக்கு லாபம் இல்லை, நஷ்டம்தான் ஏற்பட்டு வருகிறது அதுமட்டுமல்ல, மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் இல்லாமல் போகிறது என்று அதிகாரிகள் வட்டத்தில் வேதனையாகிறார்கள்.

முன்பெல்லாம், ஒரு மணி நேரத்தில் ரீ கனெக்‌ஷன் கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம், தற்போது சேவையைத் தனியாருக்கு ஒப்படைத்த விளைவு பல நாட்கள் கடந்தும் இணைப்பு கொடுக்கமுடியாத நிலையிலிருந்து வருகிறது.

**எம்.பி.காசி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share