uநிதி நெருக்கடி: பிஎஸ்என்எல் ஊழியர் தற்கொலை!

Published On:

| By Balaji

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பொதுத் துறை நிறுவன ஒப்பந்த ஊழியர் ஒருவர், 10 மாதங்களாகச் சம்பளம் வாங்க முடியாமல் நிதி நெருக்கடி காரணமாகத் தனது அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மலப்புரம் மாவட்டத்தின் வண்டூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், கடந்த 30 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக இருந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் இவருக்கு ஊதியம் வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளான அவர் நேற்று தனது அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் (சிசிஎல்யூ) தலைவர் மோகன் கூறுகையில், “மலப்புரம் மாவட்டத்தின் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2019 ஜனவரி முதல் சம்பளம் கிடைக்கவில்லை. வாரத்தில் ஆறு நாட்களாக இருந்த வேலை நாட்களும் மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டது. இவை அனைத்தும் ராமகிருஷ்ணனை கடுமையான நிதி நெருக்கடிக்குத் தள்ளி இறுதியில் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது. ராமகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கேரளாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் கடந்த சில மாதங்களாகச் சம்பளம் கேட்டுப் போராடி வருகின்றனர். ராமகிருஷ்ணனின் தற்கொலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனமும் மத்திய அரசும்தான் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ராமகிருஷ்ணனின் மரணத்துக்கு மத்திய அரசே காரணம் என்று இந்தியத் தொழிற்சங்கங்களின் மையச் செயலாளர் எலமாரம் கரீமும் தெரிவித்துள்ளார். ஜியோவுக்கு உதவ பிஎஸ்என்எல்லை மத்திய அரசு அழித்துத் தருவதாக அவர் கூறியுள்ளார். ராமகிருஷ்ணன் தற்கொலைக்குக் காரணமான மத்திய அரசுக்கு எதிராகப் போராட பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share