iஎஸ்பிஐ: இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை!

Published On:

| By Balaji

எஸ்பிஐ வங்கி சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வங்கி நிர்வாகம் இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) சொத்துக்கள், வைப்புத்தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாக இருக்கிறது, எஸ்பிஐ வங்கி 44.51 கோடி சேமிப்பு கணக்குகளைக் கொண்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குகள் வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். அதாவது, பெருநகர் மற்றும் நகர்ப்புற எஸ்பிஐ கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், சேமிப்புக் கணக்கில் மாதம் ரூ.3,000ம், சிறிய நகரங்களில் உள்ள கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் மாதம் ரூ.2,000, கிராமப்புற கிளைகளில் கணக்கு வைத்திருந்தால் ரூ.1000 என மூன்று பிரிவுகளாக மாத குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்திருந்தது.

இந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை குறையும் பட்சத்தில் வாடிக்கையாளர்களிடம் ஜிஎஸ்டியுடன் கூடிய அபராதத் தொகையாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டு இந்த அபராதத்தை 75 சதவிகிதம் குறைத்தது. அதன்படி அபராதத் தொகை ரூ.5 முதல் ரூ.15 வரை வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று எந்தவிதமான குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஜீரோ பேலன்ஸை பராமரிக்கலாம் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் எஸ்.எம்.எஸ் கட்டணத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ள எஸ்பிஐ வங்கி, அனைத்து சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகைகளுக்கும் ஒரே மாதிரியாக 3 சதவிகித வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் இதுகுறித்து கூறுகையில், இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இது வங்கி மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.

**-கவிபிரியா*�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share