மஞ்சூரியன் உணவுகள் தற்போது மிகவும் பிரபலமான உணவாகி வருகிறது. எல்லாவிதமான விழாக்கள் மற்றும் திருமணங்களிலும் சிறப்பு உணவாக இடம் பெறுகிறது. நீங்களும் ரிலாக்ஸ் டைமில் பிரெட் மஞ்சூரியன் செய்து இந்த நாளை சிறப்பாக்கலாம்.
எப்படிச் செய்வது?
வெங்காயம், தக்காளி, கேரட், குடமிளகாய்களை தலா ஒரு கைப்பிடி அளவு நறுக்கிக்கொள்ளவும். நான்கு பிரெட் ஸ்லைஸ் ஓரங்களை எடுத்துவிட்டு, சதுரமாக வெட்டி, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் பொரித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் நறுக்கிய காய்கள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் வதங்கியதும், பொரித்த பிரெட், தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கிளறவும்.
இறக்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து இறக்கவும். சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவி, அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பரிமாறவும்.