‘அரசியலில் சிவாஜி நிலைதான் நடிகர்களுக்கு ஏற்படும்’ என்று குறிப்பிட்ட முதல்வருக்கு நடிகர் பிரபு பதிலளித்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “வயதான பிறகுதான் நடிகர்கள் அரசியல் கட்சித் தொடங்குகிறார்கள். தமிழகத்தில் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் சிவாஜி கணேசனின் நிலைமைதான் அவர்களுக்கு வரும்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, முதல்வருக்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டனர். இந்த நிலையில் நடிகரும், சிவாஜியின் மகனுமான பிரபு, முதல்வர் வைத்த விமர்சனத்துக்கு பதிலளித்தார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரபு அளித்த பேட்டியில், “எம்.ஜி.ஆர் உடல்நலம் சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தபோது அவரை சென்று எனது தந்தை சிவாஜி கணேசன் சந்தித்தார். அப்போது, ஜானகியை ஆதரிக்க வேண்டுமென எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அரசியல் கட்சியைத் துவங்கினார். சிவாஜி கணேசன் பதவிக்காக ஆசைப்படவில்லை. மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். சகோதரன் என்ற நம்பிக்கையில் எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை தட்டாமல் தோற்போம் என்று தெரிந்தே ஜானகிக்கு ஆதரவளித்தார். இதுதான் உண்மை” என்று கூறினார்.
சிவாஜியை பற்றி தற்போது விமர்சனங்கள் வருவது மிகவும் கஷ்டமாக உள்ளதாகக் குறிப்பிட்ட பிரபு, “என்ன செய்வது, அவருக்கு கேமராவுக்கு முன்புதான் நடிக்கத் தெரிந்தது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இருக்கத்தான் செய்யும். காங்கிரஸ் வெற்றியடையும்போது எனது தந்தை உடன் இருந்திருக்கிறார். தோல்வியடையும்போதும் இருந்திருக்கிறார். எம்.பி.யாகவும் பதவி வகித்திருக்கிறார். இறுதியாக தன்னுடைய உடல்நிலை காரணமாகத்தான் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். அதனை விமர்சனம் செய்வதுதான் எனது குடும்பத்தினருக்கும், சிவாஜி ரசிகர்களுக்கும் வருத்தமாக உள்ளது” என்றும் தெரிவித்தார்.
1989 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் (ஜெ அணி) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததை எதிர்த்து அக்கட்சியிலிருந்து விலகிய நடிகர் சிவாஜி கணேசன், தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் தனிக் கட்சியைத் துவங்கினார். தேர்தலில் ஜானகி தலைமையிலான ஜா அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். எனினும் தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது. திருவாரூரில் போட்டியிட்ட சிவாஜி கணேசனும் தோல்வியடைந்தார். அதன்பிறகு கட்சியைக் கலைத்துவிட்டு ஜனதா தளத்தில் இணைந்த சிவாஜி கணேசன், பின்னர் அரசியலிலிருந்து ஒதுங்கினார்.
�,