நாளை (ஏப்ரல் 10) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவை உலுக்கி எடுத்தது. தற்போது முழுமையாக குறையவில்லை என்றாலும், கட்டுக்குள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி போடுவதுதான் என சுகாதாரத் துறை கூறுகிறது. 2022 ஏப்ரல் 8 காலை 7 மணி நிலவரப்படி 185.38 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
12-14 வயதிற்குட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. அதன்படி இதுவரை, 2,11,28,977 இளம் பருவத்தினருக்குத் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
15-18 வயதுடையவர்களில் 5,75,46,885 பேர் முதல் டோஸும், 3,92,36,320 பேர் இரண்டாவது டோஸும் செலுத்தியுள்ளனர். 18-44 வயதுடையவர்களில் 55,49,51,979 பேர் முதல் டோஸும், 46,91,23,705 பேர் இரண்டாவது டோஸும் போட்டுள்ளனர்.
இந்த சூழலில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தனியார் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 2.4 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், முன்களப் பணியாளர்கள் அல்லாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 2வது டோஸ் செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
**-பிரியா**