கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது ஓர் ஊழல். இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் அரசு மற்றும் பொதுமக்கள் இடையே நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகளை (Booster Dose) போடத் தொடங்கியுள்ளன.
இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி வழங்கி வருகிற பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, டிவி சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பேசுகையில், “கொரோனாவுக்கு எதிராக இரண்டாவது ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு ஆறு மாதங்களான பின்னர் பூஸ்டர் தடுப்பூசி போடுவது சிறந்தது. கொரோனா பாதித்தவர்களுக்கு அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும்” என்றார்.
இந்த நிலையில், வளர்ந்த நாடுகளில் கையாளப்படும் கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், “வருமானம் குறைந்த நாடுகளில் போடப்படும் முதல் டோஸ் தடுப்பூசியை காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு மடங்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுகின்றன.
கொரோனா தடுப்பூசி உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டபின், குறைந்தது ஒரு வருடத்துக்குப் பின்னர், பூஸ்டர் டோஸ்கள் பற்றி வளர்ந்த நாடுகள் முடிவெடுக்கலாம். அதுவரை பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.
ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆரோக்கியமான நபர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுவது தற்போதைக்கு பிரதான விஷயம் அல்ல.
எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை விட யாருக்கெல்லாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்” என்று கூறியுள்ளார்.
சமீபத்திய பிரிட்டிஷ் ஆராய்ச்சியின்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர், தடுப்பூசி செலுத்திக் கொண்டவருடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் 32 மடங்கு அதிகமாக உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**
.�,