சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இடங்களில் ஒன்று தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் பகுதி. இங்கு அமெரிக்கத் தூதரகம், காவல் நிலையம், காமராஜர் அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடனே காணப்படும். இவ்வாறு பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் இந்த இடத்தில் இன்று மாலை 4 மணிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசிச் சென்றுள்ளனர். அங்கு அடுத்தடுத்து இரு நாட்டு வெடி குண்டுகள் வெடித்துள்ளன.
இதன் காரணமாக அருகிலிருந்த கார் கண்ணாடி உடைந்து சிதறியது, தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் மர்ம நபர்கள் வெடிகுண்டை வீசிச் செல்வது பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு நடத்தினார். நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
**-கவிபிரியா**
�,”