மகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். இந்த வடு நீங்காத நிலையில், ஹரியானாவில் ஷிவானி என்ற சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து அவரும் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து பலர் ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்பதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா, நாசிக் பகுதியில் கல்வான் என்ற கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில், ரித்தேஷ் என்ற ஆறு வயது சிறுவன் நேற்று விழுந்துள்ளான். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனைக் கயிறு கட்டி மேலே இழுத்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
VIDEO: नाशिकः बोअरवेलमध्ये पडलेल्या मुलाला ‘असे’ वाचवले#NashikKalwan #ChildRescued #Borewell pic.twitter.com/oUitqQBtKK
— Maharashtra Times (@mataonline) November 14, 2019
தற்போது சிறுவன் ரிதேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனைப் பத்திரமாக மீட்ட மீட்புப் படையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிறுவனின் பெற்றோர், நாசிக்கில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,”