காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 2) நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்துள்ள மக்கள் நீதி மய்யம், கிராம சபை தொடர்பாகத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக கமல்ஹாசன் ‘காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுக்க, கிராம சபைக் கூட்டங்கள் நடக்க உள்ளன. இதில், அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும்’ என அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, தமிழகத்தின் பல இடங்களில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தினர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் அவுஸ் குப்பத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாசலம், கமீலா நாசர் ஆகியோர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். அந்தப் பகுதிகளின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும், அதற்கான தீர்வுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “50 கிராமங்கள் உள்ள இடத்தில் போதிய மருத்துவ வசதி இல்லை என்பது இந்தப் பகுதி மக்களின் குற்றச்சாட்டு. இதுதொடர்பாக அமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் மக்கள் பேசியபோது, கட்டடங்கள் கட்டித் தருகிறோம், மருத்துவர்களை நியமிக்கப் பணம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். எங்களால் மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்த முடியும். ஒருவேளை மருத்துவமனை கட்டடம் கட்டித் தந்தால் மக்கள் நீதி மய்யமே மருத்துவர்களைப் பணியமர்த்தும். ஏனெனில் எங்கள் கட்சியிலேயே 1,000 பேருக்கும் மேல் மருத்துவர்கள் உள்ளனர். அவர்களைச் சுழற்சி முறையில் பணியமர்த்துவோம்” என்று தெரிவித்தார்.
இடைத் தேர்தல் தொடர்பான கேள்விக்கு, “பணப்பட்டுவாடா நடப்பதால்தான் இடைத் தேர்தலைப் புறக்கணித்தோம். எங்களுக்கு 15 கோடி வேண்டாம். ஏழரைக் கோடி போதும். அது ஏழரைக் கோடி மக்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் 15 கோடி மதிப்புள்ளவர்கள்” என்று கூறி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக நிதியளித்ததை மறைமுகமாக விமர்சித்தார் கமல்ஹாசன்.
�,