ஆறு முறை சாம்பியனான மேரி கோம் (51 கிலோ) உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் காலிறுதிக்கு நேற்று (அக்டோபர் 8) முன்னேறினார்.
11ஆவது பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் உலன் உடே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆறு முறை சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், தாய்லாந்து வீராங்கனை ஜுட்டாமஸ் ஜிட்பாங்குடன் நேற்று மோதினார்.
தொடக்கச் சுற்றில் ஒரு பை பெற்ற மேரி கோம், முதல் மூன்று நிமிடங்களைத் தனது எதிரியின் ஆட்டத்தைக் கவனிப்பதற்கு மட்டும் நேரம் எடுத்துக்கொண்டார். இரண்டாவது சுற்றில் வேகமெடுத்த மேரி தனது எதிர் தாக்குதல்களால் தாய்லாந்து வீராங்கனைக்குக் கூர்மையாகப் பதிலடி கொடுத்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 36 வயதான மேரி கோம் ஜூட்டாமாஸ் ஜிட்பாங்கிற்கு எதிராக 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதையடுத்து, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
அதேசமயம், முன்னாள் வெள்ளிப் பதக்கம் வென்ற சவீதி பூரா (75 கிலோ) காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வேல்ஸ் நாட்டின் லாரன் பிரைசிடம் தோல்வியடைந்து இந்தியாவுக்கு ஏமாற்றம் அளித்தார்.�,”