சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து தேர்தல் களம் காணும் முதல் நபராக ஆதித்ய தாக்கரே இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
மும்பையில் தாதர் அருகே உள்ள வொர்லி தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு களமிறங்குகிறார் ஆதித்ய தாக்கரே. தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று (அக்டோபர் 3) பகல் 11 மணியளவில் ஊர்வலமாகப் புறப்பட்டார் ஆதித்ய தாக்கரே.
சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரே தன் குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் நிற்கமாட்டார்கள் என்று அறிவித்தார். அதுபோலவே அவர் இறக்கும் வரையில் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் மகாராஷ்டிர அரசியலை ஆட்டி வைத்தார். அதுபோலவே அவரது மகனும் தற்போதைய தலைவருமான உத்தவ் தாக்கரேவும் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்நிலையில் தாக்கரே குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஆதித்ய தாக்கரே சிவசேனாவின் இளைஞரணியான யுவசேனாவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை விரும்பாத யுவசேனா இளைஞர்கள், ஆதித்ய தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சிவசேனா தலைமையை வலியுறுத்தினார்கள். ஆனாலும் பாஜகவுக்கும், சிவசேனாவுக்குமான கூட்டணி கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் சிவசேனா தொண்டர்கள் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஆதித்ய தாக்கரே தனது தாத்தாவின் வாக்குறுதியை மீறி தேர்தல் களத்தில் இறங்குகிறார். 29 வயதே ஆகும் ஆதித்ய தாக்கரே ஜன் ஆசிர்வாதா என்ற யாத்திரை மூலம் மகாராஷ்டிர மாநிலம் முழுதும் பயணம் செய்து முடித்திருக்கிறார்.
சிவசேனாவின் கோட்டை என்று கருதப்படும் வொர்லி தொகுதியில் களமிறங்கும் ஆதித்யா, “நான் சிறு குழந்தையாக இருக்கும்போதே தாத்தாவுடன் பல கூட்டங்களுக்கும் சென்றுள்ளேன். அப்போதே எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது கோடிக்கணக்கான மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான ஊடகம். அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்” என்கிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் தன் தாத்தா பால் தாக்கரேவின் உருவப் படத்தை விழுந்து கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டார் பேரன் ஆதித்யா.
�,