கிச்சன் கீர்த்தனா: ப்ளூ பெர்ரி மஃப்பின் (எக்லெஸ்)

Published On:

| By Balaji

அன்றைக்கு ஐரோப்பிய நாடுகளில் எல்லோருடைய வீட்டிலும் கேக் சுடும் ஓவன் இல்லை. அப்போது கிறிஸ்துமஸ் கேக் என்பது மேல்தட்டு மக்களுக்கான இனிப்பாக மட்டுமே இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் கேக், பிரெட் செய்வதற்கான சமையல் பாத்திரங்கள், கேக்குக்கான அடுப்பு எல்லாம் நடுத்தர மக்களும் பயன்படுத்தும் விதத்தில், விலையில் உருவாக்கப்பட்டன. தொழிற்புரட்சியின் காரணமாக, எட்டா உயரத்தில் இருந்த கேக் என்பது எல்லா மக்களுக்குமான இனிப்பாக மாறிப்போனது. ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் வழியாகத்தான் உலகமெங்கும் பல்வேறு உணவுகள் பரவின. கேக்கும் அப்படித்தான் இந்தியாவுக்கும் கப்பலேறி வந்தது. இன்று கேக்கும் மைக்ரோவேவ் ஓவனும் இந்தியக் குடும்பங்களில் நிறைந்துவிட்டன.

**என்ன தேவை?**

மைதா அல்லது கோதுமை மாவு – ஒரு கப்

கார்ன் மாவு – 2 டேபிள்ஸ்பூன்

ரிஃபைன்ட் எண்ணெய் – கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன்

கெட்டியான தயிர் – கால் கப்

பால் – முக்கால் அல்லது ஒரு கப்

சர்க்கரை – முக்கால் கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

ப்ளூ பெர்ரி ஜாம் – 2 டேபிள்ஸ்பூன்

உலர்ந்த ப்ளூ பெர்ரி பழங்கள் – 2 டேபிள்ஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா அல்லது கோதுமை மாவுடன் கார்ன் மாவு, பேக்கிங் பவுடர் இரண்டையும் கலந்து இரண்டு முறை சலித்து வைத்துக்கொள்ளவும். தயிரை பெரிய பாத்திரத்தில் எடுத்து அதனுடன் பேக்கிங் சோடாவை நன்றாகக் கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு இதனுடன் எண்ணெய், பால், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து சர்க்கரை நன்றாகக் கரைந்து க்ரீம் போல ஆகும் வரை நன்றாக அடிக்கவும்.பின்னர் சலித்துவைத்த மாவை இதில் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும் (மாவு மிகவும் இறுகி இருந்தால் மேலும் கால் கப் பால் சேர்த்துக் கலந்துகொள்ளலாம்).பின்னர் இதில் ப்ளூ பெர்ரி ஜாமைச் சேர்த்து லேசாகக் கலந்துவிடவும். (மிகவும் நன்றாகக் கலந்தால் ப்ளூ பெர்ரியின் நீல நிறம் கேக்கில் தெரியாமல் போய்விடும்). பின்னர் இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் உலர்ந்த ப்ளூ பெர்ரி பழத்தையும் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை எண்ணெய் தடவிய கப் கேக் பான் அல்லது பேப்பர் கப்புகளில் முக்கால் பாகம் அளவுக்கு ஊற்றவும். இதன்மேலே மீதமுள்ள ப்ளூ பெர்ரி பழங்களைத் தூவவும்.

பின்னர் இவற்றை ஓவனில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

**[நேற்றைய ரெசிப்பி: டூட்டி ஃப்ரூட்டி கேக் ](https://minnambalam.com/public/2021/12/14/1/titi-fruity-cake)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share