ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சி, துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளது.
90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளையும், காங்கிரஸ் 31 தொகுதிகளையும் வென்றது. ஜனநாயக ஜனதா கட்சி 10, சுயேட்சைகள் 7, ஹரியானா லோகித் கட்சி 1, இந்திய தேசிய லோக் தளம் 1 இடத்திலும் வென்றுள்ளனர். 46 இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியம் என்ற நிலையில், எந்தவொரு தனிக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, பாஜகவுக்கு சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேர் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்தனர்.
சர்ச்சைக்குரிய எம்எல்ஏவான கோபால் காந்தாவும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்த நிலையில், பாஜகவிற்கு எதிர்கட்சிகள் மட்டுமல்லாது உள்கட்சியிலேயே எதிர்ப்புகள் வலுத்தன.
இந்நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியின் (ஜேஜேபி) தலைவர் துஷ்யந்த் செளதாலா, பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை அவரது இல்லத்தில் நேற்று(அக்.25) மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து விவாதித்தனர். பாஜக தலைமையில் தான் ஆட்சியமைக்க முடியும் என பாஜக முன்னரே கூறியிருந்ததால், துஷ்யந்த் தன்னுடைய முதல்வர் ’டிமான்ட்’-ஐ தளர்த்தியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமித் ஷா, துஷ்யந்த் சௌதாலாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றார். துஷ்யந்த் செளதாலா இது குறித்து கூறும் போது, “ஹரியானாவுக்கு ஒரு நிலையான அரசாங்கத்தை வழங்க பாஜக மற்றும் ஜே.ஜே.பி ஒன்று சேருவது முக்கியம். அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு நிலையான அரசாங்கத்தை வைத்திருப்பது முக்கியம் என்று எங்கள் கட்சி முடிவு செய்திருந்தது” என்றார்.
முதல்வரை முறைப்படி தேர்வு செய்வதற்காக, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மனோகர் லால் கட்டர் தலைமையில் மீண்டும் ஹரியானாவில் ஆட்சியமைப்பது என்று கட்சித் தலைமை ஏற்கெனவே முடிவு செய்துள்ளபடி, அதிகாரபூர்வமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
�,”