கட்டண உயர்வுக்கு எதிராக ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்!

Published On:

| By Balaji

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டுள்ள நிலையில், மாணவர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று(நவம்பர் 11) அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (ஏஐசிடிஇ) அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் உணவு விடுதிக் கட்டண உயர்வு, உடைக் கட்டுப்பாடு ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, ஜேஎன்யூ மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

**ஏன் ஜேஎன்யூ மாணவர்கள் போராடி வருகின்றனர்?**

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் 4 ஆம் தேதி இன்டர் ஹாஸ்டல் மேனேஜ்மென்ட் (ஐ.எச்.ஏ) குழுவால் விடுதி மாணவர்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட புதிய வரைவு வெளியானது. இப்புதிய வரைவில் மாணவர்கள் ஹாஸ்டலுக்கு வரும் நேரம், ஆடைக் உணவு விடுதிக் கட்டண உயர்வு, உடைக் கட்டுப்பாடு போன்ற பிற்போக்குத்தனமான கட்டுபாடுகள் இருப்பதாக ஜேஎன்யூ மாணவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. மாணவர்கள் இந்த வரைவு வெளியானதில் இருந்து எதிர்த்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் கூறுகிறது. அதே சமயம் ஆடைக் கட்டுபாடு உள்ளிட்டவை விதிக்கப்படவில்லை என நிர்வாகம் மறுத்துள்ளது.

இது குறித்து ஜேஎன்யூ மாணவர்கள் கூறும் போது, மிகவும் பிற்போக்குத்தனமான இந்த விடுதி கட்டுப்பாடு, நிர்வாகத்தால் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டுள்ளது” எனக் கூறுகின்றனர். மேலும், விடுதி மாணவர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.

ஜேஎன்யூ மாணவர்கள் சங்க முன்னாள் தலைவர் சாய் பாலாஜி இது குறித்து குவிண்ட் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், “உண்மையில் இந்த வரைவு, மாணவர்களால் நிராகரிக்கப்பட்ட போதிலும், மெஸ், விடுதி, துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் விடுதி ஊழியர்களால் வழங்கப்படும் சேவைகளுக்கு மாணவர்கள் பணம் செலுத்த வேண்டும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது. விடுதிக் கட்டணம், இப்போது ஆண்டுதோறும் செலுத்துவதை விட ரூ. 30,000லிருந்து ரூ. 60,000 அதிகமாக செலுத்த வேண்டும். இது கேம்பசில் உள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களை நேரடியாக பாதிக்கும். குறிப்பாக மாத சம்பளம் ரூ .12,000 க்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக ஜேஎன்யூ மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மாணவர் ஒற்றை அறைக்கான வாடகை ரூ .10 முதல் 300 வரை உயர்த்தப்பட்டது, மாணவர் இரட்டை அறைக்கான வாடகை ரூ .20 முதல் 600 வரை உயர்த்தப்பட்டது, ஒரு முறை திருப்பிச் செலுத்தக்கூடிய மெஸ் செக்யூரிட்டி டெபாசிட் ரூ .5,500 முதல் ரூ .12,000 வரை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இன்று 3ஆவது பட்டமளிப்பு விழா ஜேஎன்யூ கல்லூரியில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ள நிலையில், காலை முதல் நூற்றுக்கணக்கான ஜேஎன்யூ மாணவர்கள், விழா நடைபெறும் ஏ.ஐ.சி.டி.இ அரங்கத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட துவங்கினர். வெங்கய்யா நாயுடுவிடம் தங்கள் கோரிக்கைகளை நேரில் சந்தித்து முறையிட மாணவர்கள் முயன்றனர்.

இதனால் பாதுகாப்பு கருதி ஏராளமான காவல் துறையினரும் சிஆர்பிஎப் வீரர்களும் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். ஜேஎன்யூ வளாகத்தின் வடக்கு மற்றும் மேற்கு வாயில்களுக்கு வெளியே தடுப்புகள் வைக்கப்பட்டன. மாணவர்கள் ‘டெல்லி போலீஸ் கோ பேக்’ என்றும், துணை வேந்தர் ஜகதீஷ் குமாரை எதிர்த்தும் குரல் எழுப்பினர்.

தற்போதுள்ள கட்டண உயர்வு, கட்டுபாடு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக கருதப்படும் துணை வேந்தர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மாணவர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரி வரும் நிலையில், துணை வேந்தர் மாணவர்களை சந்திக்க மறுத்துள்ளார். இதனால் அமைச்சகத்தை சந்திக்க வேண்டும் என மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

**மாணவர்கள் – போலீசார் மோதல்**

இந்தப் போராட்டத்தில், காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.பட்டமளிப்பு விழா நடந்த போதும் மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மாணவர்கள் கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்ட போது இரு தரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து மாணவர்களை விரட்டினர்.

தொடர்ந்து ஏராளமான மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறே கோஷமிட்டு வருகின்றனர். இதுகுறித்து தெரிவித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் தலைவர் அய்சி சிங், ‘விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆடைக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மாணவிகளைப் பெண் காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அதனால், டெல்லியில் பதட்டம் நிலவுகிறது. பல்கலைக்கழகத்தைச் சுற்றி ஏராளாமான காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share