நீலகிரி மாவட்டம் கூடலூரில் அறுவடை செய்த பாகற்காய்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்ய மறுத்ததால் விவசாயிகள் ஆர்டிஓ அலுவலகம் முன்பு பாகற்காய்களைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் கூடலூர் பகுதி அமைந்துள்ளது. இதுதவிர கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் என மூன்று மாநிலங்கள் இணையும் மையமாக உள்ளது. இங்கு நிலவும் காலநிலைகளுக்கு ஏற்பவும் தேயிலைக்கு இணையாக பணப்பயிர்கள், காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. மழைக்காலத்தில் இஞ்சி, குறுமிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைகிறது.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோடைக்காலம் தொடங்கி விடுவதால் வெயிலை சமாளித்து வளரக்கூடிய பாகற்காய், அவரைக்காய், பஜ்ஜி மிளகாய், தட்டை பயறு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்கின்றனர். தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளைந்த பாகற்காய்களை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பின்னர் பாகற்காய்களை மூட்டைகளாக கட்டி மொத்த வியாபாரிகளிடம் விவசாயிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளிடம் மிகக்குறைவான விலைக்கு வாங்கி மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தலையிட்டு விவசாயிகளிடம் நியாயமான விலைக்கு பாகற்காய்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று மற்றும் நாளை தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பாகற்காய்களை அறுவடை செய்தனர். பின்னர் மொத்த வியாபாரிகளிடம் அறுவடை செய்த பாகற்காய் வழங்க முன்வந்தனர். ஆனால். பாகற்காய் விலை மிக குறைவாக உள்ளது. இதனால் கொள்முதல் செய்தாலும் விலை கட்டுப்படியாகாது எனக் கூறி மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடம் பாகற்காய்களை வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தங்கள் தோட்டங்களில் அறுவடை செய்த பாகற்காய்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மொத்த வியாபாரிகளிடம் விவசாயிகள் பலமுறை நேரில் சென்று வலியுறுத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்ட பரிதாப நிலை காணப்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடை செய்த பாகற்காய்களை சிறு மூட்டைகளாக கட்டி கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்குக் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து ஆர்டிஓ சரவண கண்ணன் மொத்த வியாபாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆர்டிஓ அலுவலகம் முன்பு தாங்கள் கொண்டு வந்த பாகற்காய்களை விவசாயிகள் திடீரென தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில் மொத்த வியாபாரிகளை அழைத்து ஆர்டிஓ மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தேவை குறைவாக இருப்பதால் பாகற்காய்களை வியாபாரிகள் வாங்க முன்வருவதில்லை என மொத்த வியாபாரிகள் விளக்கம் அளித்தனர்.
இருப்பினும் விவசாயிகளின் நலன் கருதி கொள்முதல் செய்ய வேண்டும் என ஆர்டிஓ உத்தரவிட்டார். இதை ஏற்று விவசாயிகளிடம் இருந்து பாகற்காய்களைக் கொள்முதல் செய்வதாக மொத்த வியாபாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகம் முன்பு தரையில் கொட்டி வைத்திருந்த பாகற்காய்களை மொத்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
**-ராஜ்-**
.