அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்: அழிக்கப்படும் பறவைகள்!

public

பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம், ஹரியானாவின் பன்ச் குலா மாவட்டங்களுக்கு, பல்நோக்கு ஒழுங்குமுறை குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ளது.

கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. இதில் கேரளாவில் வாத்துகளிலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காகங்களிலும், இமாசல பிரதேசத்தில் புலம்பெயர் பறவைகளிலும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட இறந்த வாத்துக்களின் மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், எச்5என்8 என்ற ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (பறவைக் காய்ச்சல்) வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே ராஜு, “புலம்பெயர்ந்த பறவைகளால் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் கோட்டயம் மற்றும் ஆலப்புழாவில் இதுவரை 23,857 பறவைகள் பலியாகியுள்ளது. இதையடுத்து மற்றப் பகுதிகளுக்கு நோய்ப் பரவாமல் தடுக்க ஆலப்புழாவில் 37,654 பறவைகளும், கோட்டயத்தில் 7,229 பறவைகளும் இன்றுக்குள் அழிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகள் அடுத்த 10 நாட்களுக்குக் கண்காணிக்கப்படும்” என்று கூறியுள்ளார். பறவைக் காய்ச்சல் பரவலை தொடர்ந்து கேரள அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது.

மேலும், தமிழக கேரள எல்லைகள், கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை எல்லையோர மாவட்டங்களுக்கு வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. சுமார் 26 செக்போஸ்ட்களில் தமிழக சுகாதாரத் துறையால் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இதேபோல், ஹரியானா, உத்தரகண்ட் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த பறவைகளின் மாதிரிகளிலும், இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்தத் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தேசிய வைராலஜி மையம், சண்டிகர் பிஜிமர், டெல்லியில் உள்ள டாக்டர் ஆர்எம்எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி நிபுணர்கள் அடங்கிய இரண்டு பல்நோக்கு ஒழுங்குமுறை குழுக்களை, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஜனவரி 4ஆம் தேதி அனுப்பியது.

மேலும் பறவைக் காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகளை மேற்பார்வையிட நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் இயக்குநர், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் மற்றும் கொரோனா சிறப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவும் கேரளாவுக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் மாநில சுகாதாரத் துறைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவர்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காகங்களுக்கும், வெளிநாட்டுப் பறவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை மத்திய கால்நடை பராமரிப்புத்துறை வழங்கியுள்ளது.

இது வரை, மனிதர்கள் யாருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுபோன்று தமிழ்நாடு, காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

**பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.