பறவை காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல்லில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கேரளா உட்பட வட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் மனிதர்களுக்கு பரவலாம் எனவும் ஆனால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்தில் 2 கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 9 விரைந்த செயல்பாட்டுக் குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டம் மற்றும் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் காகம், வன பறவைகளின் மாதிரிகளில் பறவை காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தில் 86 காகங்கள் மற்றும் 2 நாரை இன பறவைகள் அசாதாரணமான முறையில் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் என 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை சுகாதாரத் துறை கண்காணித்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டப் பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கிறது.
இந்த சூழலில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முட்டை அதிகம் உற்பத்தியாகும் நாமக்கல்லில் கடந்த 5 நாட்களில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல்லில் கோழிப் பண்ணைகளை பாதுகாக்கும் பொருட்டு 45 அதிவிரைவு கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் அமைத்துள்ளார்.
பறவைக் காய்ச்சலால் கேரள மற்றும் வட மாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் தேக்கமடைந்த முட்டைகளைக் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதாகவும், வரும் நாட்களில் முட்டைகள் தேக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பண்ணை உரிமையாளர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. முட்டைகள் தேக்கமடைந்ததால் 50 காசுகள் வரை முட்டையின் விலை குறைந்துள்ளது. தற்போது முட்டையின் விலை 4 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டல தலைவர் பி.செல்வராஜ் , “ பறவைக் காய்ச்சல் பற்றிய தவறான புரிதல்களால் நாடு முழுவதும் முட்டை விலை குறைந்து வருகிறது. வட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் அங்கு முட்டை, இறைச்சிக் கடைகளைத் தற்காலிகமாக மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் முட்டை மற்றும் இறைச்சி விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. எனவே பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
**-பிரியா**�,