‘தமிழக பெண்ணாகக் கருதி விசாரணை’: பாத்திமா தந்தை!

Published On:

| By Balaji

ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலை குறித்து அவரது தந்தை நீதி கேட்டு போராடி வரும் நிலையில் நேற்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்து மனு கொடுத்துள்ளார். அப்போது ஆணையர், பாத்திமாவை தமிழக பெண்ணாக நினைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார் என்று பாத்திமாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் தேதி சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்து நான்கு நாட்களுக்கு பிறகுதான் விசாரணை தீவிரமடைந்தது. வழக்கை கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஐஐடிக்குச் சென்ற சென்னை காவல் ஆணையர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். நேற்று முதல் மத்திய குற்றப் பிரிவு விசாரணையைக் கையிலெடுத்துள்ளது. பாத்திமா தந்தை அப்துல் லத்தீப்பிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, அப்துல் லத்தீப் நேற்று மதியம் சென்னை காவல் ஆணையரை அவரது அலுவலகத்தில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவல் ஆணையர் எனது புகாரைப் படித்து, நான் சொன்னதை முழுவதுமாக கவனமாகக் கேட்டார். எனது கைகளைப் பிடித்துக்கொண்டு பாத்திமாவை இங்குள்ள தமிழ் பெண்ணாக நினைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இரு நாட்களில் தீவிர விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாகக் கூறினார்.

தமிழக டிஜிபியும் இந்த வழக்கை விரைவாக விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் எனக் காவல் ஆணையர் தெரிவித்தார் என்றும் அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பாத்திமா மரணத்துக்கு சிபிஐ விசாரணை தேவை என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share