�உடலை கொடுங்கள்: இறுதி வரை போராடிய ஹத்ராஸ் பெண்ணின் குடும்பம் -வீடியோக்கள்!

Published On:

| By Balaji

நிர்பயா வழக்கைப் போலவே தற்போது ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் 19வயது பெண் செப்டம்பர் 14ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் செப்டம்பர் 29ஆம் தேதி காலை டெல்லி சஃப்தர்ஜ்ங் மருத்துவமனையில் உயிரிழந்தார். எப்படியும் மீண்டு வந்துவிடுவாள் என நம்பிக்கையுடன் காத்திருந்த அவரது குடும்பத்தினருக்கு இந்த செய்தி பேரிடியாய் வந்து விழுந்தது. இதைக் காட்டிலும் பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் கூட காட்டாமல் போலீசாரே எடுத்துச் சென்று தகனம் செய்தது தான் மிக கொடூரம்.

உத்தரப் பிரதேச போலீசார், குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தான் உடலைத் தகனம் செய்ததாகச் சொன்னாலும், போலீசாரின் அராஜகத்தை வெளிகொண்டு வரும் வகையில், சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

“எங்கள் வழக்கப்படி அவளுக்கு மஞ்சள் வைக்க வேண்டும்… அவள் திரும்பி வரப்போவதில்லை…. ஆனால் இறுதிச் சடங்கு நடத்தி வீட்டிலிருந்துதானே அவளை அனுப்பி வைக்கக் கேட்டோம்… ” என்று பெண்ணின் தாய் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.

पीड़ित माँ का करुण क्रंदन , बच्ची की अंतिम विदाई की भीख मांग रही अभागी माँ ,लेकिन मामला को रफ़ा दफा करने में जुटे अफसर रात में अंतिम संस्कार कराने पर आमादा… शर्मनाक !! pic.twitter.com/IjbwwZWmi6

— Gaurav Singh Sengar (@sengarlive) September 29, 2020

செவ்வாய்க் கிழமை மாலை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, சஃப்தர்ஜ்ங் மருத்துவமனைக்கு வெளியே குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, உடல் எங்கே இருக்கிறது என்று கூடச் சொல்லாமல் டெல்லியிலிருந்து ஹத்ராஸுக்கு உடலை அதிகாரிகள் எடுத்து வந்ததாகவும், போலீசாரால் பெண்ணின் சகோதரரும், தந்தையும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி, “எங்கள் மகளுக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும்” என்று போராட்டம் நடத்திய வீடியோவும் வைரலாகி வருகிறது.

தலித் உரிமைகள் அமைப்பான பீம் ஆர்மியின் தலைவரான சந்திரசேகர அசாத் மருத்துவமனை முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், “நாட்டின் மகள்கள் பாஜக அதிகாரிகளிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் காப்பாற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மருத்துவமனை முன்பு போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் அங்கிருந்து பெண்ணின் உடல் ஹத்ராஸுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காவல்துறை வாகனமும், ஆம்புலன்சும் ஹத்ராஸின் கர்ஹியில் உள்ள பெண்ணின் கிராமத்தை அடைந்தபோது, இறுதிச் சடங்கிற்காக ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் வீட்டில் கூடியிருந்தனர்.

அப்போது, வீட்டுக்கு உடலை எடுத்து வராமல் நேரடியாக இடுகாட்டுக்கு உடலை எடுத்துச் செல்ல போலீசார் முயன்றுள்ளனர். இதை அறிந்த உறவினர்களும் ,குடும்பத்தினரும் போலீஸ் வாகனத்தை மறித்து உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிக் கெஞ்சியிருக்கின்றனர். இறுதியாக ஒரு முறை எங்கள் குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதியுங்கள் என்று குடும்பத்தினர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்க மறுபக்கம், உறவினர்கள் ஆம்புலன்சை முற்றுகையிட்டு, ”எங்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று எரிக்க விடமாட்டோம்” என்று கோஷம் எழுப்பியுள்ளனர்.

மற்றொரு வீடியோவில், பெண்ணின் தந்தையிடம் ஒரு போலீஸ் அதிகாரி, உங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று முகத்தைப் பார்க்கப் போகிறீர்கள். அதை நாங்கள் இங்கேயே காட்டுகிறோம் என்று கூறுகிறார். இதைத்தொடர்ந்து, ஒரு கட்டத்தில் போலீசார் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்ட நிலையில், காலை சூரிய உதயம் வரை காத்திருக்காமல், அனைத்து சடங்குகளையும் நடத்த 20 நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு ஒப்புக்கொள்ள குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

அப்போது, குடும்ப உறுப்பினர்களிடமும், ஊர் மூத்தவர்களிடமும் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், “நான் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். எங்கள் கலாச்சாரத்தில் நாங்கள் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க மாட்டோம்” என்று வேதனையில் இருக்கும் குடும்பத்தினரிடம் கூறுகிறார். அதாவது, சடங்குகள் செய்வது என்பது நேரத்துக்கு ஏற்ப மாறுபடும் என்று அவர் தெரிவிக்கிறார்.

இவ்வாறு தங்களது உரிமைக்காக குடும்பத்தினர் போலீசாருடன் போராடிக் கொண்டிருந்த வேளையில், சுமார் 150 காவல் படையினர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். குடும்பத்தினரையும், உறவினர்களையும் இடுகாட்டுக்குச் செல்ல முடியாத வகையில் வீட்டைச் சுற்றி மனிதச் சங்கிலி போல் நின்றுகொண்டனர்.

இதைத்தொடர்ந்து 2.25 மணியளவில் போலீசார் பெண்ணின் உடலைத் தகனம் செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் இடுகாட்டுக்கு வருவதற்கு முன்னரே, உடலை எரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இறுதிச் சடங்கில் உறவினர்களும், குடும்பத்தினரும் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. அப்பெண்ணின் தந்தை கூறுகையில், எல்லா உறவினர்களையும் அழைத்து இறுதிச் சடங்கைச் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவல்துறையினர் அவர்கள் விரும்பியதைச் செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இறுதிச் சடங்கு தொடர்பான சர்ச்சைகளும், போராட்டங்களும் ஒரு பக்கம் என்றால், ஹத்ராஸ் எஸ்பி கூறுகையில், அலிகார் மருத்துவமனை அறிக்கையின் தகவல்கள், பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார் என உறுதிப்படுத்தவில்லை. தடயவியல் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். உறுதியானதை மட்டுமே கூற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் பெண் வல்லுறவுக்கு ஆளாகி நாக்கு துண்டிக்கப்பட்டு, கழுத்து எலும்பு, முதுகு எலும்பு ஆகியவற்றில் கடுமையான முறிவுகள் இருந்துள்ள நிலையில், காவல்துறை அதிகாரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் ஹத்ராஸ் பகுதியில் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share