பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் தந்தை இன்று காலமானார். புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட விரும்புவதாக அனிதா சம்பத் கூறியிருந்த நிலையில், தற்போது அவரது தந்தையின் மறைவு குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் ஊடகத் துறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அனிதா சம்பத். இவரது தந்தை ஆர்.சி.சம்பத் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆர்.சி. சம்பத் சென்னை திரு.வி.க நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு, 84 நாளாவது நாளில் போட்டியிலிருந்து வெளியேறினார். அப்போது இந்த புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். இந்தச்சூழலில், அனிதா சம்பத்தின் தந்தை இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
தரிசனத்திற்காகத் தனது மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ஆந்திரா அருகே ரயிலில் மரணமடைந்தார். இதுகுறித்து அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது தந்தை வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 62. அவர் தற்போது இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக என்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட போது அவரை பார்த்தது. நான் எவிக்ட் ஆன போது அவர் சீரடி சென்றிருந்தார். தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இன்று காலை 8 மணிக்கு அவர் மரணமடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி கிடைத்தது. நாளை அவரது உடல் சென்னை வந்தடையும். என்னால் நம்ப முடியவில்லை. அப்பா நீ வீட்டுக்கு நடந்து வரணும். உன்கிட்ட நிறைய பேசணும். உன் குரலைக் கேட்டு 100 நாளுக்கு மேல ஆச்சு. ” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
தற்போது அனிதாவின் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
**-பிரியா**�,