விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடந்து முடிந்து வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். எனினும் அந்த நிகழ்ச்சி சார்ந்த சர்ச்சைகள் இன்னும் முடிவிற்கு வந்தபாடில்லை.
பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட இயக்குனர் சேரன், லாஸ்லியாவின் தந்தையாகவே நடந்து கொண்டார். ஆனால் அவர் காண்பிக்கும் பாசம் போலியானது என்றும், விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக அவர் கையாளும் உத்திதான் இந்த பாச நாடகம் என்றெல்லாம் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் லாஸ்லியாவிற்கும் சேரன் தன் மீது காண்பிக்கும் பாசத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இயக்குனர் சேரன், அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில், இதற்கு எல்லாம் விளக்கம் அளிக்கும் விதமாகப் பேசினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சேரன் கதாநாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ராஜாவுக்கு செக்’. மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, ஆகியோருடன் விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 14 ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர்கள் வசந்தபாலன், சரண், பத்மா மகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்த விழாவில் இயக்குனர் சேரன் பேசும்போது, “இந்த படத்தில் நடித்த என்னை விட மற்ற அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். காரணம் நான் தேவையான அளவுக்கு வெற்றி, பெயர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். ஆனால் இன்னும் இந்த உலகத்தில் பாராட்டுக்களை எதிர்நோக்கி அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர் கூட்டம் தான் இங்கே இந்த படத்தில் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
குடும்பத்திற்கான திரில்லர் படமாக இது அமைந்துள்ளது. உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் இந்த படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அவர்களையும் அழைத்து வந்து இந்த படத்தை காட்ட வேண்டும். அது அவர்களுக்கு ஒரு பத்து புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொன்னதற்கு சமமாக இருக்கும். இந்த வாழ்க்கை சூழலில், இன்றுள்ள சமூகத்தில் எந்த மாதிரியான வாழ்க்கையில் நாம் இருக்கிறோம், நமக்கான அபாயங்களும் நமக்கான பிரச்சனைகளும் நம் கூடவே நடந்து வந்து கொண்டிருக்கின்றன, அப்படிப்பட்ட சூழலில் பெண் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. அப்படி ஒரு பெற்றோராக, அவர்களின் பிரதிநிதியாகத் தான் நானும் இருக்கிறேன்.
**என் பாசத்தில் எந்த பாசாங்கும் இல்லை**
நாம் எந்த தருணத்தில் அப்பாவாக உணர்கிறோம் என்பதை இந்த படம் அழகாக சொல்கிறது. நான் பல தருணங்களில் என்னை ஒரு அப்பாவாக உணர்ந்திருக்கிறேன். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூட அங்கே ஒரு அப்பாவாக வாழ வேண்டிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலும் நான் என்னுடைய உண்மையாக, நேர்மையாக என் மகளை பார்ப்பதுபோல அவரைப் பார்த்துக்கொண்டேன். அதில் எந்த பாசாங்கும் இல்லை அந்த விளையாட்டிற்காக அப்படி நடக்கவேண்டிய எண்ணமும் ஏற்படவில்லை. அந்த பாசத்தை நான் பொய்யாக காட்டினால், இந்த உலகத்தில் வாழ்வதற்கே எனக்கு அருகதை கிடையாது.
படம் பார்க்கும் பார்வையாளர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்துடன் தங்களை ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு படுத்திக் கொள்வது போல இந்த படம் இருக்கும். படம் பார்த்து முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது யாரோ ஒருவருடைய கரத்தைப் பற்றிக்கொள்ள தேடுவீர்கள். அது உங்களுடைய மகளுடைய, மகனுடைய, மனைவியுடைய, யாரோ ஒருவருடைய கரமாக இருக்கலாம். உறவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. உங்கள் உறவுகளிடம் இருந்தும் அவர்கள் ஏற்படுத்தும் தொல்லைகள், பிரச்சனைகளிலிருந்தும் அவை கொடுக்கும் அனுபவங்களிலிருந்தும் தயவுசெய்து விலகி நின்று விடாதீர்கள். கூடவே சேர்ந்து பயணியுங்கள்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு ஆதரவாக வெளியில் இருந்து பேசியவர்களில் இங்கே வந்திருக்கும் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்த கருத்துக்கள் அங்கே உள்ளே இருக்கும்போதே என் காதுகளுக்கு வந்தது. வெளியே வந்த பிறகும் அதை நான் பார்த்தேன். என்மேல் கொண்ட அன்பின் மிகுதியால் மட்டுமே அவர் அப்படி பேசியிருக்கிறாரே தவிர அதில் வேறு ஒன்றுமில்லை. அக்கறை உள்ளவர்கள்தான் நம் பக்கத்தில் வந்து நிற்பார்கள். மற்றவர்கள் பார்த்து சிரித்துவிட்டு போய்விடுவார்கள்
தமிழ் சினிமாவில் புதுப்புது படைப்பாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் அசுரன் படத்தை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். எப்படி அந்த படத்தை அருமையாக படைப்பாக்கம் செய்திருக்கிறார்கள், கமர்சியல் படங்களில் நடித்து வரும் ஒரு நடிகன் எப்படி 50 வயது மனிதனாக தன்னை மாற்றிக்கொண்டு அற்புதமாக நடிக்க முடிகிறது, அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அந்த மாதிரியான படங்களை தருவதற்கு இங்கே நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் இங்கே படங்களை வியாபாரம் செய்வதில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் ஒத்த செருப்பு படம் வெளியானது. பார்த்திபன் அருமையான படைப்பாளி. அதுபோன்ற படம் வெகு ஜனங்களை சென்றடைய வேண்டுமே என்கிற ஏக்கம் அவரைப்போல பலருக்கும் இருக்கிறது. அது போன்ற ஒரு திரைப்படம் தான் இந்த ராஜாவுக்கு செக் படமும்” என்றார்.
**இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது**
இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது, “எனக்கு குழந்தை பிறந்த தருணத்தில் மட்டுமல்ல, அதன்பிறகு பல நாட்கள் வரை ஒரு நான் ஒரு அப்பா ஆகிவிட்டது போல உணர்ந்ததே இல்லை. அவரை நான் பார்ப்பது கூட ஒரு இயக்குநரின் பார்வையாகவே இருந்தது. ஆனால் ஒருமுறை என் குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது மருத்துவமனையில் அவரை என் கைகளில் மூன்று மணி நேரம் தூக்கி வைத்துக்கொண்டே அமர்ந்திருந்தபோது தான் நான் என்னை ஒரு அப்பாவாக முழுமையாக உணர்ந்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமல்ல, சந்தோஷமும் பீறீட்டு வந்தது. அந்தவகையில் சேரன் சார் தனது படங்களில் காதலனாக நடிக்கும்போது கூட தன்னை அப்பாவாக காட்டுகிற ஒரு நடிகர் என்றுதான் சொல்வேன். இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது. தன் இதயத்தையும் ஆன்மாவையும் திறந்து இந்த உலகத்தின் முன்னால் துணிச்சலாக நிற்கிற தைரியம் எனக்கு கூட கிடையாது. ஆனால் தன் வாழ்க்கையில் மிக கஷ்டமான சூழல்களில் தன்னை ஒரு அப்பாவாக இதயத்தைத் திறந்து தன்னை நிலைநாட்டிக் கொண்ட ஒரு மிக உன்னதமான மனிதர் தான் சேரன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்துகொள்ள உள்ளே சென்று விட்டார் என்று என் மனைவி சொன்னதும் எனக்கு பதட்டமாக இருந்தது. பாரதி கண்ணம்மாவும், பொற்காலமும் ஆட்டோகிராப்பும் எடுத்த உன்னதமான கலைஞன் இவ்வளவு அலைக்கழிக்கின்ற ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவே ஐரோப்பாவில் செய்திருந்தால், ஒரு தீவையே அன்பளிப்பாக கொடுத்து நிம்மதியாக இருங்கள், நீங்கள் எங்கள் நாட்டின் பெருமை என்று கூறியிருப்பார்கள். ஆனால் அவருக்கு வேறு வழி இல்லை. அதனால் பிக்பாஸில் போய் நிற்கிறார். அதனாலேயே ஒவ்வொரு நாளும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பதட்டத்துடனே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் எல்லா சூழலையும் நேர்மையான நெஞ்சுரத்துடன் உலகத் தமிழர்கள் முன்பாக நான் உண்மையானவன் நேர்மையானவன் எனது மனம் திறந்து காட்டினார். கற்பை நிரூபிப்பது போல நிஜமாகவே நூறு நாட்கள் நெருப்பில் நின்று தனது நேர்மையை நிரூபித்து வெளியே வந்ததற்காக அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும், இந்த படத்திலும் ஒரு அப்பாவாக மிக அழகாக நடந்திருப்பார். தமிழகத்தின் பொக்கிஷம் சேரன் சார். அவரை நாம் கையில் வைத்துத் தாங்க வேண்டும்” என்றார்.�,