ஜெயலலிதாவின் பயோபிக்காக உருவாகிவரும் தலைவி படத்திற்காக தமிழ் கற்பது கடினமாக உள்ளது என்றும், இதனால் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன் என்றும் நாயகி கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிவரும் படம் தலைவி. பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நாயகியாக நடிக்கிறார். ஏ.எல். விஜய் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டாண்டுகளாக ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றிய முக்கியமான தகவல்களை சேகரித்து, இப்படத்தின் கதையை வடிவமைத்திருக்கிறார் ஏ.எல்.விஜய். திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார்.
நவம்பர் 10ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கியது. ஜெயலலிதா தன் சிறு வயதை பெரும் பாலும் மைசூரில் கழித்ததால், தலைவி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் அவரது சிறுபிராயத்தின் காட்சிகளில் இருந்து ஆரம்பமாகிறது.
ஜெயலலிதா முறையாக பரதத்தை பயின்றவர் என்பதால் இப்படத்தில் பரத நாட்டியம் முக்கியமான பங்குவகிக்கவுள்ளது. இதற்காக பரதநாட்டியக் கலையைக் கற்றுள்ளார் கங்கணா. அதே சமயம், தமிழ் மொழி உச்சரிப்புக்கான பயற்சியும் படப்பிடிப்பு துவங்குவதற்கு பல மாதங்கள் முன்பே எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், தலைவி படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து கங்கணா ரணாவத் பத்திரிகையாளர்களிடம் கூறும் போது, “எனக்கு தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக நான் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன். தமிழ் நிச்சயம் எளிமையான மொழி அல்ல. நான் ஆங்கிலம் கற்றது போல தமிழை முழுமையாக கற்றுக்கொள்ள நினைத்தேன். ஆனால் தற்போது படத்தின் தேவைக்காக மட்டும் கற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடிக்கிறார்கள். இதில் எம்.ஜி.ஆராக நடிக்கிறார் அரவிந்த்சாமி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
�,”