�எப்போதும் விவசாயிகள் பக்கம்தான்: பேச்சுவார்த்தை குழுவிலிருந்து ஒருவர் விலகல்!

Published On:

| By Balaji

f

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து ஒருவர் இன்று (ஜனவரி 14) விலகினார்.

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில், விவசாயிகளுடன் பேசி சுமுக தீர்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா(மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இக்குழுவிலிருந்து பூபேந்தர் சிங் மான் இன்று விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயச் சங்க பிரதிநிதிகளுடன் பேசி சுமுக தீர்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட குழுவில் என்னை நியமித்ததற்கு உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வேளாண் தொழிற்சங்கங்கள், பொதுமக்களிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் அச்சங்களைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் மற்றும் விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாமல் இருக்க எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். ஏனெனில் நான் எப்போதும் விவசாயிகளின் பக்கம் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share