இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால்… : நீதிபதிகள் வேதனை!

Published On:

| By Balaji

நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் மக்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதனிடையே குடும்ப அட்டைதாரர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோருக்கு அரசு சார்பில் 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

அதுபோன்று ஊரடங்கு காரணமாக, தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும், உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா ஊரடங்கு காரணமாகக் கோயில் நடை திறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும் இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

ஏற்கனவே நலிந்த கலைஞர்களாகக் கருதப்படும், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கருவிகளை வாசிக்கும் இசை கலைஞர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்த சூழலில் இவர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் பாரம்பரிய இசை கலைகள் அழிந்துவிடும் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share