ஆயுத பூஜைக்கு வந்த பொரி, யாரும் சாப்பிடாமல் அடுப்படியில் பத்திரமாக இருக்கும். இதை என்ன செய்யலாம் என்று நினைப்பவர்கள், ரிலாக்ஸ் டைமுக்கு ஏற்ற பேல் பொரி செய்து ருசிக்கலாம்.
எப்படிச் செய்வது?
முதலில் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம் பழம், இரண்டு டேபிள்ஸ்பூன் வெல்லம், கோலி அளவு புளி இவை அனைத்தையும் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பின்பு அரைத்த விழுதை அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கிளறி எடுக்கவும். இதுவே ஸ்வீட் சட்னி.
ஒரு கப் கொத்தமல்லி, ஒரு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதுவே காரச் சட்னி.
ஒரு பாத்திரத்தில் கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கால் கப் துருவிய கேரட், கால் கப் தக்காளி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து பரிமாறும்போது செய்துவைத்துள்ள காரச் சட்னி, ஸ்வீட் சட்னி தேவையான அளவு சேர்த்து, கால் கப் ஓமப்பொடி, விருப்பப்பட்டால் கால் கப் காராபூந்தி, ஒரு கப் பொரி, சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும். விரும்பினால் வறுத்த வேர்க்கடலை சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.
சிறப்பு
அனைவருக்கும் ஏற்ற இந்த பேல் பொரி உடனடி புத்துணர்ச்சி தரும். எளிதில் ஜீரணமாகும்.
�,