விநாயக் வே ஸ்ரீராம்
தேசம் !
அது, தாயாரின் கல்யாண சேலைக்கு நிகரானது.
பெற்ற தாயின் பட்டுச் சேலையானது பரண் மீதிருக்கும் துருப்பிடித்த ட்ரங்குப் பெட்டிக்குள் சுருண்டு இருக்கலாம். அதில்,, தூசு படிந்திருக்கலாம். மடிப்பெங்கும் நூலிழிந்து நைந்திருக்கலாம். ஆங்காங்கே கிழிந்தும் இருக்கலாம். ஆயினும், அதன் வாசம் சுகந்தமானது ! அதனை விட்டுக் கொடுக்கலாகாது.
அந்தப் பட்டுச் சேலையினை அப்படியே அடுத்த தலைமுறைக்கு அள்ளிக் கொடுத்து விட வேண்டும் என்னும் தியாக தாகத்தோடுத் தன் அப்பாவிக் குடும்பத்தை வறுமையில் வேக வேக வைத்துத் தமிழாடிச் செத்தவர் பாரதியார் !
அன்றவர் எழுதிய வரிகள் இன்றும் கையேந்திக் கேட்கின்றன…
**
தீயினைக் கும்பிடும் பார்ப்பார் – நித்தம்
**
**
திக்கை வணங்கும் துருக்கர் !
**
**
கோவிற் சிலுவையின் முன்னே – நின்று
**
**
கும்பிடும் யேசு மதத்தார் !
**
**
யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
**
**
யாவினும் நின்றிடும் தெய்வம் !
**
**
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்
**
**
பற்பல சண்டைகள் வேண்டாம் !
**
பெருங்கவி பாரதியின் இந்த வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக் காட்டுவதற்கு காரணம் உண்டு. அதனை இறுதியில் சொல்வேன். அவர் வாழ்ந்த அந்த காலத்திலேயே சண்டைகள் உண்டு என்பதை மட்டும் இத்தருணத்தில் புரிந்து கொள்வோம்.
பாரதியாரிடம் பெரும் பக்தி வைத்திருந்தவர் பாரதிதாசனார். பாரதியின் சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்ட அவரது முதற் கவிதை சுதேசமித்திரன் பத்திரிக்கைக்கு கனக. சுப்புரத்தினம் என்னும் அவரது இயற்பெயரில் பாரதியாரின் அடிக்கோடோடு அனுப்பப்பட்டது .
“எங்கெங்கு காணிணும் சக்தியடா; எழுகடல் அவள் வண்ணமடா…”
எழுகடலின் வண்ணம் என்ன ?
அதை புரிந்து கொள்வதற்கு முன் ‘வண்ணம்’ என்னும் பதத்தின் உட்பொருளைக் கொண்டாக வேண்டும். பாரதியாரால் ஆமோதிக்கப்பட்ட கனக சுப்பு ரத்தினம் அவர்களின் கூர்த்த மதி அப்போதுதான் புரியும் .
‘வண்ணம்’ என்பதற்கு தமிழில் பற்பல பொருளுண்டு. ‘குணம்’ என்னும் பொருளும் அதில் ஒன்று !
கம்பன் காட்டும் காவியத்தில்…
**
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
**
**
உய்வண்ணம் அன்றி மற்றொர் துயர்வண்ணம் உறுவது உண்டோ
**
**
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
**
**
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் !
**
ஆம், ‘வண்ணம்’ என்பதற்கு ‘குணம்’ என்பதும் பொருளாகும் என்கின்றார்கள் கிருபானந்த வாரியார், புலவர் கீரன் போன்ற பொருளாய்ந்த மேலோர் .
இப்போது பாவேந்தரின் கவிதைக்கு வருவோம்.
அவர் பாடிய எழுகடலின் குணம் என்ன ?
கடல், தன்னியல்பாக இருக்கும்போது ஒரு குணம் காட்டும் ; பொங்கி எழுந்தால் சுனாமி போல கோர குணம் காட்டி விடும்.
ஆம், உலகின் கசடுகளை எல்லாம் கடலில் கொண்டு போய்க் கொட்டும் மனிதர்களின் நீச்சச் செயல் பொறுக்க மாட்டாமல் கடல் அன்னை கோபித்துக் கொள்ளும் தருணம்தான் சுனாமி. ‘ச்சீச்சீ உன் கசடுகளை நீயே வைத்துக் கொள்…’ எனக் கரை கடந்து விசிறியடித்து விடுகிறாள்.
போலவே, ‘எங்கள் அன்னை தன்னியல்பில் இருந்தால் ஓர் குணம் காட்டுவாள் ; எழுந்தாள் என்றால் ஊழிக் கூத்தாய் ஆடிக் காட்டி விடுவாள்…’ என்கிறார் ஐயா கனக சுப்பு ரத்தின பாரதிதாசன்.
“எங்கெங்கு காணிணும் சக்தியடா; எழுகடல் அவள் வண்ணமடா…”
இந்த தேசமும் அப்படித்தான். அது, தன்னியல்போடு இருக்கும்போது சாந்த குணம் காட்டும் ; பொங்கி எழுந்தால் பல முகம் காட்டிவிடும் !
சிஏஏ என்று ஒரு சட்டம் வருகிறது. அந்த சட்டம் இந்தியாவின் தன்னியல்புக்கு ஏற்றதென்றால் சுக முகம் காட்டும். அல்லவெனில் தன்னியல்பாகவே பொங்கி எழுந்துவிடும். தாயின் பட்டுச் சேலை கிழிபடுமென்றால் யாருக்குத்தான் இங்கே மனம் பொறுக்கும் !
இதுகாறும் நடந்ததெல்லாம் அரசியல் அனாச்சாரம்.. கொண்டு கூட்டிப் பார்ப்போம்.
தேசத்தை ஒரு ஒரு மாநிலமாக்கி, மாநிலத்தை ஒரு மாவட்டமாக்கி மாவட்டத்தை ஒரு ஊராக்கி அதை இன்னுமின்னும் சுருக்கி ஓர் குடும்பமாக்கிப் பார்ப்போம்.
குடும்பத்தில் நடக்காத சண்டையா ?
அப்படி குடும்பத்தில் சண்டை ஒன்று வந்து விட்டால் அந்த குடும்பத்தார் என்ன செய்வார்கள் ? முதலில், தங்கள் நலத்தை மட்டுமே யோசிப்பார்கள். அது குறித்தே அடித்துக் கொள்வார்கள். அதைத் தவறென்று சொல்ல முடியாது. அதுவே மனித குணம்.
சண்டை என்றால் அக்கம் பக்கம் சும்மா இருக்குமா ? பஞ்சாயத்து என்னும் பெயரில் மூக்கை நுழைக்கும். உன் சண்டையில் எனக்கென்ன லாபம் எனப் பார்க்கும்.
பஞ்சாயத்து பாதகமாகிப் போகும் என உள்ளூறப் பதை பதைக்கும்போதுதான் ஆரம்பித்த சண்டையின் உண்மையான அர்த்தம் மனித மனதுக்கு விளங்கும். சமாதானத்தை நோக்கி ஓடும்.
அந்த நேரத்தில், உண்மையான சமாதானத்துக்காக எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும். இதுதான் உலக இயல்பு !
இன்று ரஜினியை தேடி இஸ்லாமிய குருமார்கள் செல்கிறார்கள். ரஜினி இன்னமும் அரசியலில் இறங்கவில்லை. ஆயினும், அவரைத் தேடி ஏன் போகிறார்கள் இஸ்லாமியப் பெருமக்கள். தாயின் பட்டுச் சேலை கிழிபட்டுவிடக் கூடாதே எனப் பதைக்கிறார்கள் .
உன் சண்டையில் எனக்கு என்ன லாபம் எனப் பார்க்கும் சமூக விரோதிகளை கண்டு தன்னியல்பாக நகர்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை இங்கே நாம் குறித்துக் கொண்டாக வேண்டும்.
சமூக விரோதிகள் எங்கும்தான் இருப்பார்கள். அவர்களை நீக்கிச் சொல்கிறேன். இஸ்லாமிய கிறித்துவப் பெருமக்கள் இந்த நாட்டுக்காகச் செய்த தியாகங்கள் அளப்பரியது. அவர்களால் இந்த தேசத்துக்கு ஆபத்து வந்துவிடப் போகிறது என்றால் பாரதி, பாரதிதாசன் வழி வந்த என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
முதலில் சொன்ன பாரதியின் வரிகளில் எனக்கிருக்கும் சில கேள்விகளோடு முடித்துக் கொள்கிறேன்.
**
தீயினைக் கும்பிடும் பார்ப்பார் – நித்தம்
**
**
திக்கை வணங்கும் துருக்கர் !
**
**
கோவிற் சிலுவையின் முன்னே – நின்று
**
**
கும்பிடும் யேசு மதத்தார் !
**
பாரதியார் என்னும் தீர்க்கதரிசி அன்று சொன்ன பார்ப்பனர் – துலுக்கர் – கிறித்துவர் மூன்று பிரிவினரும் இங்கே சிறுபான்மையினர் தானே ? இன்னமும் இந்த தேசத்தில் அவர்கள் அப்படித்தானே ? கூட்டிக் கழித்தாலும் மூவரும் சேர்ந்து 15 % கூட இல்லையே !
மேற்கண்ட மூன்று சிறுபான்மையினரால் மட்டுமே ஒட்டு மொத்த தேசத்தின் நலனும் பாதித்து விடுமா என்ன ? தேசத்துக்கான பொறுப்பு மேற்கண்ட சிறுபான்மையினர் அல்லாத பெரும்பான்மை மக்கள் வசமல்லவா ? இந்த உண்மையை எளிதில் கடந்து விடலாகுமா ?
அவர்களை, பெரும்பான்மை இந்துக்கள் அல்லது பெரும்பான்மை தமிழர்கள் அல்லது பெரும்பான்மை இந்தியர்கள் என்றெல்லாம் அழைத்துக் கொள்வது அவரவர்களின் பொய் மாய அரசியல் கூச்சலுக்கு உட்பட்டது. அது குறித்து எனக்கெந்தக் கவலையும் இல்லை.
எனது கவலை எல்லாம் வாய் மூடி இருக்கும் அந்தப் பெரும்பான்மை மக்களைக் குறித்து மட்டுமே ! அவர்கள் முன் வந்து முடிக்காமல் பலனிருக்கப் போவதில்லை.
பெரும்பான்மை மக்களை சாதியின் பெயரால் மதங்களின் பெயரால் பிரித்து வைத்திருக்கும் சுயநல அரசியல்வாதிகளின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் விமோசனம் என்பது இல்லை. இல்லை.
இனியேனும், பெரும்பான்மை மக்கள் ஒன்றுகூடி நின்று இந்த தேசத்துக்கான நியாயத்தை வலியுறுத்தாமல் போனால், இன்னும் ஐம்பது வருடங்கள் கடந்தாலும் ‘பாருக்குள்ளே தெய்வம் ஒன்று ; இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்…’ என்னும் பாரதியின் கை கூப்பலுக்கு அவசியம் நேரிட்டுக் கொண்டுதான் இருக்கும்.
அன்று, வாழத் தகுதி படைத்தவர்கள் பலர் வறுமையின் பாதையில் கடத்திக் கொடுத்த தாயின் ஸ்வாசம் அடங்கிய அந்தப் பட்டு சேலைக்குத் தீ வைக்கும் காரியத்தை யார் செய்தாலும் அவர்களை தெய்வம் மன்னிக்காது என்பது மட்டும் நிச்சயம் .
ஓட்டரசியல் சந்தையில் நானும் ஒரு ஆடு என்பதில் என்ன பெருமை இருக்கிறது ? என் தகப்பன் மாடு மேய்த்தார். அதனால் நானும் மாடு மேய்ப்பேன் என்பதில் சாரம் ஏது ? வைத்திருப்பதோ வைக்கோல் மாடு. அது, சாணத்துக்கும் ஆகாது. அடி மாட்டுக்கும் உதவாது .
தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் நல்லதோர் தலைமையின் கீழ் அணிவகுத்தலால் மட்டுமே இந்த தேசத்துக்கு நன்மை செய்துவிட முடியும் என்பதை பெரும்பான்மை மக்கள் உணர வேண்டிய காலம் இது. அவர்கள் ஒன்று கூடி தமிழகத்தை விடிய வைக்க வேண்டிய வேளை இது .
மற்றபடி, சிஏஏ என்று இல்லை அது போல் ஆயிரம்தான் வந்தாலும் அதில் நியாயம் ஒன்று இல்லாது போனால் எவருக்காகவும் இந்த தேசம் காத்திருக்காது. ‘உன் கசடுகளை இங்கே கொட்டாதே…’ எனத் தன்னியல்பாகவே எழுகடலாகி விடும் !
பாரதியாரால் ஆமோதிக்கப்பட்ட பாரதிதாசனாரின் எச்சரிக்கைப் பிரகடனம் அதைத் தான் நமக்குக் காட்டுகிறது !
�,”