ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் இரண்டு ஏர்பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து கார்களிலும் ஓட்டுநர் இருக்கைக்கு ஏர்பேக் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. ஓட்டுநருக்கு மட்டும் ஏர்பேக் வசதி இருப்பதால் முன் இருக்கையில் ஓட்டுநருடன் அமர்ந்திருப்பவருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால், விபத்தின்போது அசம்பாவிதம் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
அதனால், தற்போது முன் இருக்கையில் இரண்டு ஏர் பேக் வசதியை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் முன் இருக்கையில் இருக்கும் இருவருக்குமே ஏர்பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கார்களில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள், ஏர் பேக்குகள் இருக்க வேண்டும். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கார்களில் கூடுதலாக ஒரு ஏர்பேக்கை பொருத்துவதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். அதனால்தான், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவால், கார்களின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், இனி வரும் காலங்களில் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும்.
**வினிதா**
�,