அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய முஸ்லீம் தரப்புக்கு உச்ச நீமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து முஸ்லீம்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
உத்தர பிரதேசத்திலுள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் நாற்பது நாட்கள் தொடர்ந்து நடந்தது. இந்த விசாரணையில், இருதரப்பு வாதங்கள் கடந்த 16ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. நவம்பர் 4 முதல் 17ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், முஸ்லிம்கள் தரப்பு வழக்கறிஞர் தங்கள் தரப்பு எதிர்வாதம் மற்றும் இறுதியான ஆவணங்கள், கருத்துக்களை உச்ச நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் எந்த தரப்பினரும் தங்கள் தரப்பு கருத்துக்களை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்க அனுமதி அளிப்பதாக தெரிவித்தது. தங்கள் எழுத்துபூர்வமான வாதத்தை மூடிய உறையில் வைத்து வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சமர்ப்பிப்பதாக முஸ்லிம் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில், அதன் முடிவு நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ளுமாறு உச்சநீதிமன்றத்தை முஸ்லீம்கள் தரப்பு வலியுறுத்தி நேற்று(அக்.20) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இந்த தீர்ப்பு நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருக்கும் என்பதால், இந்த மாபெரும் தேசம் ஆதரிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கையும், அதன் பின்னான நிவாரணத்தையும் பரிசீலிக்க வேண்டும். நீதிமன்றத்தை என்றும் நாங்கள் நம்புகிறோம்” என 7 முஸ்லீம் அமைப்புகள் தங்கள் ஒரு பக்க அறிக்கையில் கூறியிருக்கின்றன.�,