பீர் விலையில் முறைகேடு: முன்னணி நிறுவனங்களுக்கு அபராதம்!

Published On:

| By Balaji

ஏபி இன்பெவ், கார்ல்ஸ்பெர்க், யுனைடெட் ப்ரூவரிஸ் ஆகிய முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்திற்காக விதிகளை மீறி விலைகளைக் கூட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில் எத்தனையோ நிறுவனங்கள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் அவை அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வருவதில்லை. குடிமகன்களின் உற்சாக பானமாக கருதப்படும் பீர் உள்ளிட்ட மது வகைகளின் விலை உயர்ந்துள்ளதாக ஒரு பக்கம் புலம்பல் இருந்தாலும், மறுபக்கம் விற்பனை சரியாமல் ‘ஸ்டெடி’யாக போய்க்கொண்டுதான் இருக்கிறது. அதையும் மீறி, டாஸ்மாக்கில் நிர்ணயித்த விலையை விட 5 ரூபாய் அதிகம் விற்கிறார்கள் என அவ்வப்போது செய்திகளில் சில சண்டைகள் நடந்ததாகப் பார்ப்போம்.

இந்நிலையில், சமீபத்தில் கசிந்துள்ள செய்தியொன்று, விலையை நிர்ணயம் செய்யும் அமைப்புகளையே ஏமாற்றியிருக்கும் மூன்று முக்கியமான பீர் நிறுவனங்களின் முறைகேட்டைப் பற்றிய வெளிவராத தகவல்களைப் பற்றியிருக்கிறது.

டெல்லியிலுள்ள காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (Competition Commission of India) வாடிக்கையாளர்களின் நன்மை மற்றும் சேவையை கணக்கில் கொண்டு போட்டி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வழியில் செயல்படும் ஒரு கமிஷன் ஆகும். சமீபத்தில் இந்த கமிஷன், ஏபி இன்பேவ் (ஏபிஐபிஆர்), கார்ல்ஸ்பெர்க், யுனைடெட் ப்ரூவரிஸ் (யுபிபிடபிள்யூ.என்.எஸ்) ஆகிய மூன்று முன்னணி மதுபான நிறுவனங்கள் பீர் விலையை நிர்ணயிப்பதற்காக ஒன்றிணைந்து விதிகளை மீறியதாக கண்டுபிடித்திருக்கிறது.

காம்படீஷன் கமிஷன் விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, இம்மூன்று மதுபான அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில், சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தங்கள் நிறுவனத்திற்கு லாப ரீதியிலான நன்மையைப் பெறுவதற்காக இரகசியமாக அல்லது சட்டவிரோதமான முறையில் இம்மூன்று நிறுவனங்களும் 2018 ஆம் ஆண்டில் ஈடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

விசாரணையில், மூன்று மதுபான உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிந்த 15 முதல் 20 நிர்வாகிகள், இந்திய மாநில கட்டுப்பாட்டாளர்களிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், தங்கள் நிறுவனங்களில் உற்பத்தியாகும் பீர் விலையை தங்களுக்கு சாதகமான வழிகளில் நிர்ணயிக்க விவாதங்களில் ஈடுபட்டனர். பின்னர் விலை நிர்ணயிப்பிலும் அதனை சாத்தியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். சட்ட நடவடிக்கைகளின் படி மாநில கட்டுப்பாட்டாளர்களைச் சந்திக்கும் முன் தனிப்பட்ட முறையில் சந்திப்பது விதிமீறலாகும். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத காம்படீஷன் கமிஷன் அதிகாரி ஒருவர், “கடந்த ஆண்டு இந்நிறுவனங்களில் நடைபெற்ற தேடல்களின் போது, கைப்பற்றிய சான்றுகள் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இருக்கின்றன” என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்திருக்கிறார்.

கார்ல்ஸ்பெர்க், தனது சொந்த பிராண்டின் பெயரிலும், டூபோர்க் என்ற முன்னணி பிராண்டையும் சொந்தமாகக் கொண்டுள்ளது. இது குறித்து நேற்று(அக்டோபர் 25) ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களின் கேள்விக்கு, கார்ல்ஸ்பெர்க் நிறுவனம், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இணங்குவதாக கூறியுள்ளது.

ஹெய்னெக்கனுக்கு சொந்தமான யுனைடெட் ப்ரூவரிஸ், அதன் கிங்பிஷர் பிராண்டிற்கு பெயர் பெற்றது. கமிஷனின் விசாரணையின் போது தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவுள்ளதாக கூறியுள்ளது.

காம்படீஷன் கமிஷனின் தலைவர் அசோக் குமார் குப்தா மற்றும் கமிஷனின் பிற உறுப்பினர்கள், அடுத்த சில மாதங்களில் இந்நிறுவனங்களுக்கு ஆகஸ்டில் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை முடிவுகள் தொடர்பாக அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளார்கள் என செய்திகள் கூறுகின்றன.

இந்திய சந்தையில் இம்மூன்று மதுபான உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் மட்டும் சுமார் 85 சதவீத அளவுக்கு விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குற்றத்தில் ஈடுபட்ட ஏபி இன்பேவ் நிறுவனமே கார்ல்ஸ்பெர்க், யுனைடெட் ப்ரூவரிஸ் ஆகிய நிறுவனங்களுடன் நடத்திய முறையற்ற சந்திப்பை வெளிப்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனங்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக இருக்கலாம் எனவும் செய்திகள் கூறுகின்றன. ஏபி இன்பெவ் முதலில் இந்த சிக்கலைப் புகாரளித்ததால் அபராதத்தில் அதன் பங்கிலிருந்து தப்பிக்க முடியும் என கூறப்படுகிறது..

இதற்கு முன், கார்ல்ஸ்பெர்க் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸுடன் பல ஆண்டுகளாக பீர் விலையை நிர்ணயித்து வந்திருக்கின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கார்ல்ஸ்பெர்க் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் ஆகியவை இந்த வழக்கு தொடர்பாக கோரிக்கை விண்ணப்பத்தை காம்படீஷன் கமிஷனுக்கு அனுப்பியிருக்கிறது. அதே சமயம், காம்படீஷன் கமிஷன் நடவடிக்கை எடுக்க எப்போது வேண்டுமானாலும் தயாராகலாம் என கூறப்படுகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share