கொரோனா வைரஸ் தொற்று வல்லரசு நாடுகள், கிராமப் பகுதிகள் என பல்வேறு இடங்களிலும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனா உட்படப் பாதிப்புகளை பல்வேறு நாடுகளும் குறைத்து வருகிறது. ஆனால் இந்தியா கொரோனா பாதிப்பில் பல்வேறு நாடுகளையும் முந்தி வருகிறது.
இந்த வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய நாடான சீனாவை கொரோனா பாதிப்பில், மே 16 அன்று முந்திய இந்தியா இன்று (மே 25) ஈரானை முந்தியது.
கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 7,000 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் படி, இந்தியாவில் 6,977 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாகும். இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 545 ஆக உள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். 57 ஆயிரத்து 721 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 77 ஆயிரத்து 103 பேர் தொடர் சிகிச்சையிலிருந்து வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கொரோனா பாதிப்பில் ஈரானை முந்தி, உலக அளவில் பத்தாவது இடத்திற்கு நகர்ந்து உள்ளது இந்தியா. ஈரானை பொருத்தவரை பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 81 ஆக இருக்கிறது என்று worldometers தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே 1ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரமாக இருந்த நிலையில், அடுத்த 25 நாட்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரமாக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு அறிவித்து, ரயில் , விமானச் சேவைகளைத் தொடங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,