நீதித் துறையில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்று கொண்டனர். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 33ஆக உள்ளது.
இந்த நிலையில், புதிய நீதிபதிகளை வரவேற்கும் வகையிலும், தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் நோக்கிலும், உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் பாராட்டு விழா ஒன்றை இன்று(செப்டம்பர் 26) ஏற்பாடு செய்திருந்தனர். இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில்,” நீதிமன்றங்களிலும், சட்டக் கல்லூரிகளிலும் 50% இடஒதுக்கீட்டை கோருவதற்கு உங்களுக்கு(பெண்கள்) முழு உரிமை உண்டு. 50 சதவிகித இட ஒதுக்கீடு உங்களின் உரிமை. கிட்டதட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். கீழமை நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 30 சதவிகிதத்திற்கு குறைவாகவே உள்ளது.
உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 11.5 சதவிகிதமாகவும், உச்ச நீதிமன்றத்தில் 11-12 சதவிகிதமாகவும் உள்ளது. நாட்டில் 1.7 மில்லியன் வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்களில் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பெண்கள். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏன் ஒரு பெண் பிரதிநிதி கூட இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளேன். இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு தேவை” என்று கூறினார்.
கார்ல் மார்க்ஸ் சொன்னதை நான் உங்கள் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்… ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியை தவிர’ என்று கூறினார். அதை நான் மாற்றி சொல்கிறேன், உலக பெண்களே ஒன்று சேருங்கள், இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை சங்கிலியை தவிர’ என்று கூறினார். மேலும் பெண் வழக்கறிஞர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார்.
நாட்டின் நீதித் துறையில் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினையை இந்த மாதத்திலேயே இரண்டாவது முறையாக தலைமை நீதிபதி பேசியுள்ளார்.
முன்னதாக இந்திய பார் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு… எல்லா நிலைகளிலும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவிகித பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் மிகுந்த சிரமத்துடன் உச்ச நீதிமன்றத்தில் 11 சதவிகிதத்தை அடைந்துள்ளோம்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,”