காவல் நிலையங்களில் சிசிடிவி: டிஜிபி பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Balaji

காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகளைப் பாதுகாப்பது தொடர்பான வழக்கில் தமிழக டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய போலீசாரிடம் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் ஒரு நாளிலேயே அழியும் வகையில் செட் செய்யப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகவும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அதிசய குமார், தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சாத்தான்குளம் சம்பவத்தில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள், பொது ஆவணங்கள் என அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட வில்லை. சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபோன்று தமிழக காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் மனித உரிமை மீறலைத் தடுக்கவும், காவல் துறையினரை கண்காணிக்கவும், சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு ஆதாரமாக சிசிடிவி பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொறுத்த உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துக் கண்காணிப்பதோடு, காவல் நிலையங்களில் இருக்கும் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஒரு ஆண்டுக்குப் பாதுகாத்து வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்டு இன்று (ஜூலை 21) விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், இம்மனு தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share