�’மன்னிப்பு கேட்க வேண்டும்’: தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

Published On:

| By Balaji

16 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய நபரிடம், ”அந்த பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ள தயாரா? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் மோகித் சுபாஷ் சவான், 2014ஆம் ஆண்டு 16 வயது பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மோகித் சுபாஷின் தாய் சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார். மேலும், சிறுமிக்கு 18 வயது ஆனதும் திருமணம் செய்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போட்டப்பட்ட பின்னர், புகார் வாபஸ் பெறப்பட்டது..

தற்போது, அந்த நபர் சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் மோகித் சுபாஷ் சவான். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதி எஸ்.ஏ.போப்டே, குற்றம்சாட்டப்பட்டவரிடம், நீங்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தயாரா?” என்று கேட்டார்.

அதற்கு மோகித் சுபாஷ், நான் முன்பே அந்தப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்டேன், அவர் மறுத்துவிட்டார். தற்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டதால், அந்தப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

‘அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முடியும். இல்லையென்றால் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறை செல்ல வேண்டும். உங்களின் அரசு வேலையும் பறிப்போகும்’ என நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

*வலுக்கும் கண்டனங்கள்*

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் சர்ச்சைக்குரிய கேள்விக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்னி ராஜா, கவிதா கிருஷ்ணன், கம்லா பாசின், மீரா சங்கமித்ரா, மைமூனா மொல்லா மற்றும் ஜாகியா சோமன் உள்ளிட்ட பிரபல பெண் உரிமை ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

3,500க்கும் மேற்பட்ட பெண்ணுரிமை ஆர்வலர்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு அனுப்பிய கடிதத்தில், ” பாலியல் குற்றவாளிகளுக்கு திருமணம் என்பது பாலியல் வன்கொடுமைக்கான உரிமம் என்ற செய்தியை தலைமை நீதிபதி சொல்ல வருகிறாரா? அத்தகைய உரிமத்தைப் பெறுவதன் மூலம், பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தவோ அல்லது சட்டப்பூர்வமாக்கவோ முடியும் என்கிற நிலை உருவாகக்கூடும். அதனால், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பதவி விலக வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பிருந்தா கரத் எழுதிய கடிதத்தில், “’இதுபோன்ற கேள்விகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை உணர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால், சிறைக்கு போகாமல் தப்பி விடலாம் என்ற சிந்தனையை உருவாக்கி விடும். இத்தகைய கருத்துகள், பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துவிடும். ஆகவே, உங்கள் கருத்துகளை வாபஸ் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை டாப்ஸி, “பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்தப்பெண் மணக்க விரும்புவாளா? இதெல்லாம் ஒரு கேள்வியா? இது தீர்வா அல்லது தண்டனையா?’ என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேதிவாலா, ஆடைக்கு மேல் தீண்டுவது போக்சோ சட்டப்படி பாலியல் சீண்டால் ஆகாது என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய பிறகு, அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் கொலிஜியம் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

*வினிதா*

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share