காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சேவைகள், அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று மதியம் முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய நான்கு விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய நான்கு விமானங்கள் உள்பட எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.திருச்சி, மதுரை, மும்பை, சார்ஜாவில் இருந்து வருகை, புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
காரைக்கால் -ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே நாளை காலை 6 மணியளவில் கரையை கடக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதி மிக கனமழையும், 21 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை காலை 8.30 மணிக்குள் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் கடந்த 9 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 32 மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 23.7 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கடற்கரையை நெருங்கும்போது கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக் கூடும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு, தமிழ்நாடு மாநில மீட்பு குழுக்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. சென்னையில் இன்றிரவு பலத்த கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இரவு முதல் நாளை வரை மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை திரும்பியுள்ளதையடுத்து, ட்விட்டரில் பலரும் கடலூர் மாவட்டம் தப்பித்துவிட்டது என்றும், சென்னை சிக்கி கொண்டது என்றும் ட்வீட் செய்து வருகின்றனர்.
**-வினிதா**
�,