ஆசிட் வீச்சுக்கு ஆதரவா? டிக்டாக்குக்கு எதிரான போராட்டம்!

Published On:

| By Balaji

குறுகிய நேர வீடியோக்களை பதிவிடும் செயலியான டிக்டாக் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் எதிர்ப்புகளையும் பாராட்டுகளையும் சந்தித்து வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலி கடந்த வருடம் தடை செய்யப்பட்டு மீண்டும் அந்த தடை திரும்பப் பெறப்பட்டது.

தற்போது மீண்டுமொருமுறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது டிக் டாக்.இந்த தாக்குதல் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் அதற்கு கொடுக்கப்படும் பயனாளர்கள் ரேட்டிங் 1 ஆக குறைந்துள்ளது. இந்திய பயனாளர்கள் இந்த செயலிக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் கடந்த சில நாட்களாக குறைந்த ரேட்டிங்கை அளித்து, 4.5 ஆக இருந்த அதனுடைய ரேட்டிங்கை 1.3 ஆக குறைத்துள்ளனர்.

ரேட்டிங் குறைந்தது மட்டுமல்லாமல், தொடர்ந்து டுவிட்டரில் bantiktok என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது. டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கக்கோரி இந்தியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர், ஆப்பிள் பயனாளர்கள் உபயோகிக்கும் ஆப் ஸ்டோரில் 4.8 ரேட்டிங்கை பெற்றுள்ளது டிக்டாக்.

இந்த குறைந்த ரேட்டிங் பின்னணியிலிருக்கும் சம்பவமாக 13 மில்லியன் பின்தொடர்பவர்கள் கொண்டுள்ள பைசல் சித்திக் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.

வீடியோவில் ஃபைசல் சித்திக், என்னை விட்டு இன்னொருவருடன் சென்றாய். தற்போது அந்த நபர் உன்னை பிரிந்து சென்று விட்டானா என்று கேட்டு, கண்ணாடி பாட்டிலில் இருந்த திரவத்தை அந்த பெண் முகத்தில் தெளிப்பது போலவும், பிறகு அந்தப் பெண் முகத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தழும்புகள் போல் ஒப்பனை செய்து கொண்டு வருவது போலவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆசிட் வீச்சை ஆதரிக்கும் வகையில் அந்த டிக் டாக் வீடியோ இருந்ததாக கூறி தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த விவகாரம் தற்போது வைரலாகி டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களுக்கான தேசிய கமிஷன் ஆசிட் வீச்சை ஆதரிப்பது போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் டிக் டாக் வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது என்று டிக் டாக்கிற்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் டிக் டாக்கிற்கு இதுபோன்ற பிரச்சனைகள் வருவது புதிது கிடையாது. வன்முறையை தூண்டும் செய்திகளை பரப்புவதாக கூறி கடந்த ஆண்டு இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டது. இதற்கு பிறகு ஆறு மில்லியன் வீடியோக்களை அதன் செயலியில் இருந்து நீக்கியது டிக்டாக் நிர்வாகம். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த தடையை நீக்கியது. அதை தொடர்ந்து மீண்டும் பிளே ஸ்டோர் மற்றும் அப் ஸ்டோரில் இந்த செயலி உபயோகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

**-பவித்ரா குமரேசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share