மத்திய அரசு மேற்கொண்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற நடவடிக்கையின்பேரில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைத்து ஒன்றாக்கும் அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வங்கி ஊழியர்கள் சங்கங்களிலிருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்கள் எண்ணிக்கை குறையும் மற்றும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச்செல்லும் என்று ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (அக்டோபர் 22) அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய இரண்டு பெரும் வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதன் மூலம் வங்கி சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் இந்த வாரத்துக்கான வங்கி வேலைகளை இன்றே முடித்துக்கொள்ள பலரும் தயாராகி வருகிறார்கள்.
ஏற்கெனவே செப்டம்பர் மாதம் நடத்த இருந்த இந்த வேலைநிறுத்தம் மத்திய அரசின் தலையீட்டின் பேரில் தள்ளிவைக்கப்பட்டது. அக்டோபர் 22ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் என்றாலும் இந்த வாரம் தீபாவளி வர்த்தகம் மற்றும் ஷாப்பிங் போன்றவற்றுக்கான வாரம் என்பதால் வங்கியிடமிருந்து இன்றே பணத்தை எடுத்துக் கொள்ளும்படி வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளை வங்கிகள் திறந்திருக்கும் என்றாலும் பெருமளவு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கும் நிலையில் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பொதுத் துறை வங்கிகள் இணைப்புக்கு எதிரான பேரணி நடைபெற உள்ளது.�,