ஆன்லைன் சூதாட்டம்: ரூ.1.85 கோடியைத் திருடிய வங்கி மேலாளர்!

Published On:

| By Balaji

மும்பையில் தான் பணியாற்றிய வங்கியில் ரூ.1.85 கோடியை திருடி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வங்கி அதிகாரியின் செயல் அம்பலமாகியுள்ளது.

மும்பை தாதரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் துணை மேலாளராக இருப்பவர் 31 வயது சதாசிவ். இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் ரூ.2.05 கோடியை தாதர் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டதாக செலான் தயாரிக்கப்பட்டு பாந்த்ராவில் உள்ள கணக்கு சரிபார்க்கும் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், செலான் இருந்தாலும், வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை. ரூ.29.16 லட்சம் மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது ஆய்வில் தெரியவந்தது. எஞ்சிய பணம் பேப்பர் மட்டத்தில் மட்டுமே வங்கியில் செலுத்தப்பட்டு இருந்தது.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் தாதர் கிளையில் பணத்தைக் கையாளும் மற்றும் டெபாசிட் செய்யும் பிரிவில் வேலை செய்யும் சதாசிவ் இடம் விசாரித்தனர். அவர் ஆரம்பத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.

ஆனால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் 1.85 கோடி ரூபாயை எடுத்ததை ஒப்புக்கொண்டார். திருடிய பணத்தை சதாசிவ் ஒன்பது வங்கிக்கணக்கில் செலுத்தியிருக்கிறார். அந்தப் பணத்தை மொபைல் மூலம் டிரான்ஸ்பர் செய்து ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி இருக்கிறார்.

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் முழு பணத்தையும் இழுந்து விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அவர் சொன்ன விவரம் உண்மையா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்காக போலியான ரசீது மற்றும் செலான் தயாரித்து தாக்கல் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

சதாசிவ், கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த வங்கியில் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து பேசியுள்ள மாட்டுங்கா இன்ஸ்பெக்டர் தீபக் சவான், “தாதர் வங்கி நிர்வாகிகள் கொடுத்த புகார் குறித்து விசாரித்து வருகிறோம். குற்றவாளி பணத்தை ஆன்லைனில் விளையாடி இழந்திருப்பதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பிறகு விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share