}கிச்சன் கீர்த்தனா: பனானா வால்நட் கேக் (எக்லெஸ்)

Published On:

| By Balaji

‘Schwarzwalder Kirschtorte’ என்று சொன்னால் சத்தியமாக யாருக்கும் புரியாது. ‘Black Forest Cake’ என்றால் போதும்… நாக்கில் எச்சில் ஊறும். பண்டைய எகிப்தியர்கள் மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சுட்டுச் சாப்பிட்டதில் ரொட்டி பிறந்தது. அவர்களே கேக்கையும் உருவாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள் உணவியலாளர்கள். இன்று விதம்விதமான கேக் வகைகள். அவற்றில் ஒன்று முட்டையில்லாமல் தயாரிக்கப்படும் இந்த பனானா வால்நட் கேக்.

**என்ன தேவை?**

நன்கு பழுத்த வாழைப்பழம் – 3

சர்க்கரை – ஒன்றே கால் கப்

ரிஃபைண்ட் எண்ணெய் – அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன்

கெட்டித் தயிர் – அரை கப்

மைதா அல்லது கோதுமை மாவு – 2 கப்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

வால்நட் – அரை கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

**எப்படிச் செய்வது?**

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா அல்லது கோதுமை மாவுடன் உப்பைச் சேர்த்து இரண்டு முறை சலித்து வைத்துக்கொள்ளவும். வாழைப் பழங்களைத் தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசிக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தயிருடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரை கலந்து நன்றாக அடித்து ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஐந்து நிமிடங்களில் அது நன்றாக நுரைத்து வரும். பிறகு அதனுடன் எண்ணெய், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து சர்க்கரை முழுவதுமாக கரைந்து க்ரீம் போல ஆகும் வரை அடிக்கவும். பின்பு இதனுடன் மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் இதில் சலித்த மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். மாவைச் சேர்த்துக் கலக்கும்போது அதிகமாக அடித்துக் கலக்கக் கூடாது. லேசாகக் கலந்தால் போதும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வால்நட்டைச் சேர்க்கவும்.

பிறகு ஒரு பேக்கிங் பானில் நன்றாக எண்ணெய் தடவி, கேக் கலவையை அதில் ஊற்றவும். பிரீஹீட் செய்த ஓவனில் இதை வைத்து 35-ல் இருந்து 40 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

**[நேற்றைய சண்டே ஸ்பெஷல் கஞ்சி](https://minnambalam.com/public/2021/12/12/1/porridge)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share