�
பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புது படங்களின்போது நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் தடைவிதிக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று (அக்டோபர் 25) நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயி செ.நல்லசாமி, “ நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, பால் உற்பத்தியாளர்களை இழிவுபடுத்தும் செயலாக உள்ளது. எனவே அரசு இதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு விளக்கம் அளித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் பேசினார்கள். இதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் உறுதி கூறினர்.
சமீபத்தில் சிம்பு நடித்து வெளியான படத்தின்போது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்களிடம், “படத்துக்காக பிளக்ஸ் வைப்பதோ, கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவதோ வேண்டாம். அதற்கு பதிலாக உங்களது அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு சட்டை, தம்பி, தங்கைகளுக்கு இனிப்புகள் என உங்களால் முடிந்ததை வாங்கிக் கொடுங்கள். அவர்களுக்கு நீங்கள் கொடுப்பதைப் படங்களாகவோ இல்லையென்றால் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினால் அதைவிட எனக்கு வேறு சந்தோஷம் இல்லை” என்று சிம்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
�,