பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

public

நாளை (ஜூலை 10) பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

அதன்படி பக்ரீத் திருநாளை முன்னிட்டு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆளுநர்

அமைதியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் நாம் உறுதி கொள்வோம். இந்த தியாக திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன் மற்றும் மகிழ்ச்சியையும், வழங்குவதுடன் நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும்.

முதல்வர்

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்; கரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் – எடப்பாடி பழனிசாமி

இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலை நிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

பக்ரீத் திருநாளைக் கொண்டாடுவது இஸ்லாமியர்களாக இருக்கலாம்; ஆனால், பக்ரீத் திருநாள் சொல்லும் செய்தி அனைவருக்குமானது தான். பக்ரீத் திருநாளை முன்வைத்து இஸ்லாம் சொல்லும் செய்தியைத் தான் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மதங்கள் கூறுகின்றன. அனைத்து மதங்களும் சொல்லும் செய்தி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்பது தான்.

இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுப்பூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் என் இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்று வாழ்த்து கூறியுள்ளார்.

அதுபோன்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனையும் களைகட்டியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்து எட்டயபுரத்தில் உள்ள ஆட்டு சந்தையில், 10,000 திற்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகியுள்ளது. சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

-மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *