xபாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன்!

Published On:

| By admin

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா ஆவார். இவர் தனது பள்ளி ஆசிரமத்தில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சிவசங்கர் பாபா தரப்பில் அவரது வழக்கறிஞர் ஸ்வாதி ஜிந்தல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபாவின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு நேற்று (ஏப்ரல் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ” சிவசங்கர் பாபாவுக்கு இதய நோய் உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

அதேசமயத்தில் அரசு தரப்பில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கினால் இவ்வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களைக் கலைக்கக் கூடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து நேரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் தொடர்ந்து சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சாட்சியங்களைக் கலைக்க முற்படக்கூடாது, கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்குச் செல்லக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. சாட்சியங்களைக் கலைக்க முயற்சி செய்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share