தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்க ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து மற்ற 18 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்தது. வழக்கு நிலுவையில் இருப்பதால் 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கவில்லை என்று காரணமும் சொல்லியது.
இந்த நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தாதது உள்நோக்கம் கொண்டது எனவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளதாகவும், நியாயம் கிடைக்கவில்லையெனில் உச்ச நீதிமன்றம் வரை செல்லவுள்ளதாகவும் பேட்டியளித்தார்.
தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படாத பட்சத்தில் திமுக தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகளிலும் திமுக வழக்கறிஞர் பிரிவு ஈடுபட ஆரம்பித்துவிட்டது.
ஏனெனில் 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடப்பதை திமுக முக்கியமாகப் பார்க்கிறது. 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்து அதில் ஒருவேளை அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற்றுவிட்டால் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டால் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான கபில் சிபல் ஆஜராகவிருக்கிறார்.
இந்தியா முழுவதுமுள்ள 70 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்துவருகிறது. அப்படியிருக்க வழக்கை காரணம் காட்டி 3 தொகுதிகளில் மட்டும் தேர்தல் தள்ளிவைப்பது ஏன் எனவும், வழக்குதான் காரணமென்றால் 70 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன் எனவும் திமுக தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்படவுள்ளது.
முன்னதாக திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ போஸ் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை உடனே வழங்க வேண்டும் என்று வழக்கை தொடர்ந்த திமுக வேட்பாளர் சரவணன் இன்று முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அரவக்குறிச்சி தேர்தல் வழக்கின் விசாரணைக்கு செந்தில் பாலாஜிதானே உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளார். அவரிடம் அந்த வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் வழக்கை திரும்பப் பெறுவதாக சரவணன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு இன்று (மார்ச் 11) அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தேர்தலை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் கூறவில்லை. வழக்குகள் நிலுவையில் இருந்தபோதும் பல தேர்தல்கள் நடந்துள்ளன. எனவே தொகுதி மக்களின் நலன் கருதி திருப்பரங்குன்றத்திற்கு இடைத் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.�,