b15 ஆயிரம் கோடி போதுமானதல்ல: தலைவர்கள்!

public

“நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் கோரியுள்ளது போதுமானதல்ல” என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நிவாரண நிதி கோருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். புயல் பாதிப்புகளைப் பிரதமரிடம் விளக்கிய முதல்வர், தற்காலிக சீரமைப்புக்காக 1,500 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நிரந்தர சீரமைப்புப் பணிக்காக 15,000 கோடி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மத்தியக் குழு பார்வையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நான்காவது நாளாக நேற்று (நவம்பர் 22) சந்தித்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், நிதி கோரியுள்ளது போதுமானதல்ல என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்காமலேயே அவசரம் அவசரமாக டெல்லிக்குப்போன எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதியாக 15,000 கோடியும், இடைக்கால நிவாரணமாக 1,500 கோடியும் கேட்டிருக்கிறார். இது போதுமானதல்ல” என்று குறிப்பிட்டுள்ள தினகரன், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் சேத மதிப்பே 25,000 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். இதை மனதில் வைத்து இடைக்கால நிவாரணமாக 5,000 கோடியையாவது கேட்டிருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில், “முதல்வர் இவ்வளவு அவசரமாகச் சென்று பிரதமரைப் பார்த்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஒரு லட்சம் மின்கம்பங்கள், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ளன என்று கூறுகிறார்கள். இழப்பீடுகள் குறித்து முழுமையாகக் கணக்கீடு செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. எனவே, அரைகுறை ஏற்பாட்டுடன் சென்று பிரதமரைச் சந்தித்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 15 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது என்பது குறைவான மதிப்பீடு. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆளாளுக்கு ஒரு கணக்கைக் கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் புதுப்பள்ளியில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “பிரதமரிடம் முதல்வர் 15 ஆயிரம் கோடி நிதி கோரியுள்ளார். இது பற்றாக்குறையாக உள்ளது. மக்கள் எவ்வளவு பாதிப்படைந்துள்ளனர் என்பது அவர்களை பார்க்கும்போதுதான் தெரிகிறது. மத்திய அரசின் நிதி ஒதுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தமிழகம் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வேண்டும். இந்தியாவின் எந்த மூலையிலிருந்து வந்தாலும் இவர்களின் சோகம் அவர்களுக்குப் புரியும்” என்று தெரிவித்துள்ளார்.

இடைக்கால நிவாரண நிதியாக மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0