பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தினைச் சந்தித்துள்ள நிலையில், பிரதமரைச் சந்தித்து நிவாரண நிதி வழங்கக் கோருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார். இன்று (நவம்பர் 22) பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். கஜா புயல் பாதிப்புகளை பிரதமரிடம் விளக்கிய முதல்வர், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.14, 910 கோடி வழங்க வேண்டுமெனவும், இடைக்கால நிதியாக ரூ. 1,431 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கஜா புயலால் சேதமடைந்துள்ளன. பிரதமரிடம் புயல் சேதங்களை விளக்கி, இது தொடர்பான விவரங்களை மனுவாக அளித்துள்ளோம். தற்காலிக சீரமைப்புக்காக 1500 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நிரந்தர சீரமைப்புப் பணிக்காக 15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு பார்வையிட்டுச் சேத விவரங்களைக் கணக்கிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன். விரைவில் மத்தியக் குழுவை அனுப்பி வைப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.
“85 ஆயிரம் பேரை முகாம்களில் தங்க வைத்ததன் மூலமாக கஜா புயல் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே இருந்து மீட்புப் பணிகளை கவனித்தனர். இரண்டு முறை தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத்தான் பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ள முதல்வர்,
கஜா புயல் பாதிப்பு நிகழ்ந்ததும் உடனேயே அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி சேத விவரங்களைக் கணக்கீடு செய்து, அதனை தற்போது பிரதமரிடம் சமர்பித்துள்ளோம். தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துகொண்டிருக்கிறது. தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன எனவும் கூறியுள்ளார்.
கஜா புயலுக்கு 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 63 பேர் பலியாகியுள்ளதாகவும், 3 லட்சத்து 41 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட முதல்வர், மற்ற சேத விவரங்களையும் நிவாரண பணிகள், இழப்பீடுகள் குறித்தும் விளக்கினார்.
திமுக ஆட்சிகாலத்தில் கொடுக்கப்பட்ட புயல் பாதிப்பு இழப்பீடுகளை விட அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிகமாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்த முதல்வர், ஆனால் இழப்பீட்டுத் தொகை குறைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இயற்கை பேரிடரை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய கடமை இது. ஆனால் வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால்தான் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இழப்பீட்டை ஒப்பிட்டேன் என்றும் விவரித்தார்.
சாலை மார்க்கமாக ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “தவறான கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கின்றனர். சாலை மார்க்கமாக ஆய்வு செய்த ஸ்டாலின் எத்தனை இடங்களுக்குச் சென்றார்? நான்கு மாவட்டங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எப்படி ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பார்க்க முடியும்? ஹெலிகாப்டரில் செல்லும்போது புகைப்படங்கள் எடுத்துவைத்துள்ளோம். ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து, சேதமடைந்தவற்றைப் பார்வையிட்டோம். ஓரிரு இடங்களில் பார்வையிட்டால் முழு சேதத்தையும் அறிந்துகொள்ள முடியாது” என்று தெரிவித்தார். மேலும் ஹெலிகாப்டர் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் காண்பித்தார்.�,”