கேரள மாநிலத்தில் 105 வயது மூதாட்டி ஒருவர் அம்மாநில அரசின் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் நான்காம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள திரிக்கருவா பகுதியைச் சேர்ந்தவர் பாகிரதி அம்மாள். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் அவரால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. மூன்றாம் வகுப்பிலேயே அவரது படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. படிப்பைத் தொடரமுடியாமலே இருந்த நிலையில் அவருக்குத் திருமணம் நடந்துள்ளது.
கணவரும் பாகிரதி அம்மாளுக்கு 30 வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். இதையடுத்து தனது ஆறு பிள்ளைகளையும் தனியாகவே வளர்த்துள்ளார். சிறு வயது முதலே குடும்ப பொறுப்பைச் சுமந்த அவரின் கல்வி மீதான ஆசை கனவாகவே முடிந்தது.
தற்போது அவருக்கு 105 வயது. 16 பேரன், பேத்திகள் உள்ளனர். அவரது குடும்பத்தினர், பாட்டியின் ஆசை குறித்துக் கேட்டதற்கு, படிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தினர் உதவியுடன் கேரள அரசு கொண்டுவந்துள்ள எழுத்தறிவு திட்டத்தின் மூலம் பாகிரதி அம்மாள் தனது படிப்பை மீண்டும் தொடர்ந்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் படிப்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும் வயது தடையில்லை என்ற நிலையில், கேரள எழுத்தறிவு கல்வி இயக்கம் நடத்திய சமச்சீர் தேர்வில் கலந்து கொண்டார். நான்காம் வகுப்புக்கான தேர்வுக்குத் தயாராகி வந்த அவர், கடந்த 16ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்.
எழுத்தறிவு கல்வி இயக்கத்தைச் சேர்ந்த வசந்த் குமார் கூறுகையில், “100 வயதைக் கடந்தாலும் அவருடைய ஞாபகத் திறனும், கண் பார்வையும் மிகத் தெளிவாக இருக்கிறது. அவரே தேர்வு எழுதினார். இடையே முடியாதபோதுதான் அவரின் கடைசி மகள் உதவினார். கடினமாக இருந்தாலும் எப்படியோ சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம் என மூன்று தேர்வுகளையும் எழுதி முடித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக கேரளாவில் இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 96 வயதில் ஒரு மூதாட்டி எழுத்தறிவு தேர்வில் 98/100 மதிப்பெண் எடுத்து சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,