காரிஃப் பருவத்தின் பயிர் விதைப்புப் பரப்பளவு 100 மில்லியன் ஹெக்டேரை எட்டியுள்ளது.
இதுகுறித்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு காரிஃப் பருவத்தில் 1,023 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி பணிகள் முடிந்துள்ளன. இது கடந்த ஆண்டு காரிஃப் பருவத்தைக் காட்டிலும் சற்று குறைவேயாகும். கடந்த ஆண்டு காரிஃப் பருவத்தில் 1,027 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் நெல் சாகுபடி 370 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் நெல் சாகுபடி 368 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.24 விழுக்காடு கூடுதலான அளவில் இந்த ஆண்டு சோயாபீன் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் 112 லட்சம் ஹெக்டேரில் சோயாபீன் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் 4 லட்சம் ஹெக்டேரில் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நிலக்கடலையைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 விழுக்காடு குறைவாக 39 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பருப்பு சாகுபடி இதுவரையில் 133 லட்சம் ஹெக்டேரில் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.55 விழுக்காடு குறைவாகும். இதில் உளுந்து சாகுபடி மட்டும் 13 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 லட்சம் ஹெக்டேர் கூடுதலாகப் பாசிப்பருப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 52 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 50 லட்சம் ஹெக்டேராக மட்டுமேயிருந்தது. பருத்தி சாகுபடி 118 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 லட்சம் ஹெக்டேர் குறைவாகும்” என்று கூறப்பட்டுள்ளது.�,