தமிழகத்தில் 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது அர்த்தமற்றதாக இருக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இதுதொடர்பாக கடந்த 10ஆம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 10 சதவிகித இடஒதுக்கீட்டை 16 கட்சிகள் எதிர்த்தன. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு பாதகம் வந்தால் 10 சதவிகித இடஒதுக்கீட்டை நிராகரிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 18) செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், 10 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “இடஒதுக்கீட்டை பொறுத்தவரை தமிழக அரசு தமிழகத்தின் உரிமைகளுக்கு எந்தவித பங்கமும் வராமல் நடந்துகொள்ளும். அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே செயல்படுவோம் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மத்திய அரசிடம் தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துவைப்போம்” என்று தெரிவித்தார் மாஃபா பாண்டியராஜன்.
தொடர்ந்து, “தமிழகத்தில் முன்னேறிய வகுப்பினரை பொறுத்தவரை 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே உள்ளனர். அப்படி இருக்கும்போது கிரீமிலேயர் வருமான எல்லையை அடிப்படையாகக் கொண்டால் 90 சதவிகிதம் பேர் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறுபவர்களாக இருப்பர். அதன்படி, அனைவருக்குமே இட ஒதுக்கீடு அளிக்க வேண்டியது வரும். அது முறையல்ல என்பது மத்திய அரசாங்கத்திற்கே தெரியும். வட மாநிலங்களில் 50 சதவீதம் பட்டியலின மக்கள் இருக்கும் இடங்களில், 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் அர்த்தமற்றதாக இருக்கும் என்பது மத்திய அரசுக்கே தெரியும்” என்று கருத்து தெரிவித்த பாண்டியராஜன்,
“அரசின் நிலைப்பாட்டை எந்த முறையில் எந்த நேரத்தில் எடுத்துவைக்க வேண்டுமோ அந்த நேரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துவைப்பார். திமுக உள்பட யார் என்ன சொன்னாலும், மத்திய அரசுடன் நல்லுறவு வைத்திருக்கிறோமே தவிர அடிமை சேவகம் செய்யும் அரசாங்கம் எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் கிடையாது” என்றும் கூறினார்.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
�,”